‘ஜனநாயகன்’ பட வழக்கு.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.. அடுத்தடுத்து விஜய்க்கு பின்னடைவு!!
ஜனநாயகன் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்படம் பொங்கலையொட்டி, ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதாவது, இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் அங்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த வழக்கில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தையே அனுகுமாறு தயாரிப்பு நிறுவனத்தை அறிவுறுத்தினர். தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். முன்னதாக, இப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் செய்யப்படவில்லை.
Also Read… அல்லு அர்ஜுன் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சம்பளம் இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்
ஜனநாயகனுக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்:
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை காரணமாக அவரது கடைசிப் படமாக ‘ஜனநாயகன்‘ வெளியாக இருந்தது. கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மலேசியாவில் பிரம்மாண்டமாக பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் இப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்தது. அதாவது, படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது.
உயர்நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்பு நிறுவனம்:
இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது.
தணிக்கை வாரியம் மேல்முறையீடு:
மேலும், விசாரணையின்போது தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தை ஏன் அவசரப்படுத்துகிறீர்கள்? சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன்? நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்புக்கு சரமாரி கேள்வி எழுப்பியது தலைமை நீதிபதி அமர்வு. தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜன.21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்சநீதிமன்றத்தை அணுகிய தயாரிப்பு நிறுவனம்:
இதனிடையே, பொங்கலுக்கு இப்படத்தை எப்படியாது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று எண்ணிய தயாரிப்பு நிறுவனம். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்:
இந்நிலையில், இன்றைய தினம் (ஜனவரி 15) இந்த வழக்கு நீதிபதிகள் தீபங்கள் தத்தா, அகஸ்டின் ஜாரஜ் மசிஹ் அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த வழக்கில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தையே அனுகுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
Also Read… நோ சிலம்பரசன்… நோ ரஜினிகாந்த்… இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து இவரதான் இயக்கப் போறாரா?
20ம் தேதிக்குள் விசாரிக்க உத்தரவு:
குறிப்பாக, வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் எனக் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்த பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் என்பது உறுதியாகியுள்ளது.