OTT Movies: மறக்க முடியாத ஜாக்கிசான் படம்.. தி கராத்தே கிட் எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

The karate kid : 2010 ஆம் ஆண்டு வெளியான "தி கராத்தே கிட்" படம் ஜாக்கி சான் மற்றும் ஜேடன் ஸ்மித்தின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சீனாவின் பெய்ஜிங்கில் குங்ஃபூ பயிற்சி, கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதையாக அமைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சீனாவின் பிரபல இடங்களில் நடைபெற்றது. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

OTT Movies: மறக்க முடியாத ஜாக்கிசான் படம்.. தி கராத்தே கிட் எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

The Karate Kid படம்

Published: 

26 Jun 2025 09:30 AM

 IST

ஜாக்கிசானுக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரின் பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஜாக்கிசான், ஜேடன் ஸ்மித் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “தி கராத்தே கிட்”. ஹாரால்ட் ஸ்வார்ட் இயக்கிய இப்படமானது தற்காப்பு கலையான குங்ஃபூவை மையமாக வைத்த படமாக அமைந்தது. ராபர்ட் மார்க் காமனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு கிறிஸ்டோபர் மர்ஃபி திரைக்கதை எழுதியிருந்தார். தி கராத்தே கிட் பாகங்களில் இது 5வது திரைப்படமாக உருவானது. மேலும் இப்படத்தில் தாராஜி பி. ஹென்சன், வென்வென் ஹான்,ஜென்வீ வாங், யூ ரோங்குவாங், லூக் கார்பெரி – ஹாரி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். ரோஜர் பிராட் ஒளிப்பதிவு செய்த நிலையில் ஜேம்ஸ் ஹார்னர் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களைக் காணலாம்.

படத்தின் கதை


மிச்சிகனில் உள்ள டெட்ராய்டில் இருந்து 12 வயது ட்ரே பார்க்கர் மற்றும் அவரது ஒற்றை தாய் ஷெர்ரி ஆகிய இருவரும் சீனாவின் பெய்ஜிங்கிற்கு வருகிறார்கள். அங்கு ட்ரே பார்க்கர் இளம் வயலின் கலைஞர் மெய்யிங்கை சந்திக்கிறார். அவர் மீது அன்பு வருகிறது. இதை மெய்யிங்கிற்கு நெருக்கமான குங்ஃபூ கலைஞரான செங்கால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர் தனது குழுவினரை ஏவி ட்ரேவிடம் வம்பிழுக்கிறார். பொறுமையிழக்கும் ட்ரே அழுக்கு தண்ணீரை அந்த கும்பல் மீது வீச அவர்கள் அவனை தாக்குகிறார்கள். இதனை குங் ஃபூ மாஸ்டரான ஹான் தடுத்து ட்ரேவை காப்பாற்றுகிறார் அவரது அம்மா ஷெர்ரியிடம் பேசி என்ன நடந்தது என்ற உண்மையை கூறுகிறார். இதனையடுத்து ட்ரேவை ஹானிடம் குங்ஃபூ கற்றுக்கொள்ள வேண்டும் என ஷெர்ரி தெரிவித்து விடுகிறார்.

இப்படியான நிலையில் சமாதானம் பேச ட்ரேவை ஹான் அழைத்துச் செல்கிறார். அங்கு செங்கின் பயிற்சியாளரான லீ அதனை மறுத்து இருவரும் போட்டியிட்டு ட்ரே வென்றால் பிரச்னையை முடிக்கலாம் என கூறுகிறார். முதலில் மறுக்கும் ஹான் பின்னர் ஒப்புக் கொள்கிறார். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

படத்தின் சிறப்புகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மகனான ஜேடன் ஸ்மித் ட்ரே பார்க்கராக அறிமுகமாகி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் துறுதுறு இளைஞனாக பார்த்து ரசிக்கப்பட்ட ஜாக்கிசான் இதில் சற்று வயதான கேரக்டரில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். படத்தின் பெயர் கராத்தேவாக இருந்தாலும் இதில் சீனாவில் தற்காப்பு கலையான குங்ஃபூ கற்றுக் கொடுக்கப்படுகிறது. இப்படம் சீன அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஷூட்டிங் பகுதிகளான இம்பீரியல் நகரில் உள்ள அரண்மனை, சீன பெருஞ்சுவர், வுடாங் மலைகளில் படப்படிப்பு நடைபெற்றது. 2009 ஜூலையில் ஷூட்டிங் தொடங்கி அக்டோபரில் நிறைவடைந்தது.

விமர்சன ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்ற தி கராத்தே கிட் வசூலை குவித்தது. மேலும் விமர்சகளிடமிருந்தும் நல்ல கருத்துகளை பெற்றது. இந்த படத்தில் அடுத்த பாகமாக தி கராத்தே கிட் லெஜண்ட்ஸ் 2025 மே மாதத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 2010ல் வெளியான கராத்தே கிட் படத்தை நாம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை