ED Raid: துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Dulquer Salmaan: சென்னையில் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்மூட்டிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. பூடானில் இருந்து சொகுசு கார்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதில் பணமோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, அக்டோபர் 8: சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகரான மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகராக உள்ளார். இவர் பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் கூட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா சாப்டர் 1 படத்தை தயாரித்திருந்தார். இப்படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. மலையாள சினிமாவில் ரூ.300 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. துல்கர் சல்மான் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவரிடம் இருந்து இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக பூடான் நாட்டில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்ததாக வந்த புகார்கள் அடிப்படையில் அந்த சோதனையானது நடைபெற்றது. இதே போல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான பிரித்திவிராஜ் தொடர்புடைய இடங்களிலும் சோதனையானது நடைபெற்றது.
Also Read: வகைவகையான சொகுசு கார்கள்.. துல்கர் – பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை!
இந்தியாவின் அண்டை நாடான பூடானில் இருந்து இந்திய நாட்டுக்குள் சொகுசு கார்களை கொண்டு வந்து மத்திய அரசுக்கு வரி செலுத்தாமல் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருந்து பூடான் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கார்களை குறைந்த விலைக்கு ஒரு கும்பல் வாங்கி இமாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் பிரபலங்களான துல்கர் சல்மான், பிரித்திவிராஜின் பெயர்கள் சிக்கியது. இந்த நிலையில் தான் செப்டம்பர் மாதம் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) காலை சென்னை அபிராமிபுரத்தில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Also Read: வதந்திகளை நம்பாதீர்கள்; துல்கர் சல்மான் சொன்ன விசயம்!
துணை ராணுவ படையினருடன் இரண்டு கார்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னையில் உள்ள நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான வீடுகளிலும், அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது. பூடானில் இருந்து கார்களை பெற்ற விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.