பிரபல ஹீரோவுக்காக யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் – என்ன படம் தெரியுமா?
புதிய கீதை படம் தான் விஜய் - யுவன் இணைந்த முதல் படம். மெர்குரி பூவே, வசியக்காரா, அண்ணாமலை தம்பி போன்ற பாடல்கள் ஹிட்டடித்தன. இருப்பினும் அந்தப் படத்தின் தோல்வியினால் அவர்களது காம்போ தொடர வில்லை. விஜய்யும் யுவனும் இணைய வேண்டும் என்பது இருவரது ரசிகர்களுக்கும் நீண்ட நாள் ஏக்கமாக இருந்தது.

விஜய் - யுவன்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா (Yuvan Shankar Raja) தனது 17 வயதில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சரத் குமார் (Sarathkumar) ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா இந்தப் படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் சில காட்சிகளுக்கு யுவன் இசையமைத்ததை பார்த்த டி.சிவா அவரது திறமைகளை பாராட்டி இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். இந்தப் படத்தில் எஸ்பிபி பாடிய ஈர நிலா பாடல் இன்றளவு பலரது பிளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக பாடல்கள் ஹிட்டானாலும் முதல் பிரேக் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸின் (A.R.Murugadoss) தீனா படத்தின் மூலம் அவருக்கு கிடைக்கிறது.
அதன் பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தில் தான் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் என்பதை அழுத்தமாக பதிவு செய்தார் யுவன். யுவன் – செல்வராகவன் காம்போ, யுவன் – விஷ்ணுவர்தன், யுவன் – ராம், யுவன் – வெங்கட் பிரபு என தான் கைகோர்க்கும் இயக்குநர்களின் படங்களுக்கும் அவர்களின் ஸ்டைலுக்கு ஏற்ப இசையமைத்து படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். யுவனும் தனது அப்பா இளையராஜா போல யார் ஹீரோ, இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல் ஒவ்வொரு படத்துக்கும் தனது மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பல படங்களுக்கு யுவனின் இசையே அடையாளமாக இருந்திருக்கிறது.
புதுமுகங்களின் படங்களுக்கு அடையாளமாக மாறிய யுவனின் இசை
தனுஷ் கூட மாரி 2 பட இசை வெளியீட்டு விழாவில் துள்ளுவதோ இளமை படத்தில் எல்லோரும் புதுமுகங்கள் என்பதால் அந்தப் படத்துக்கு அடையாளம் யுவன் தான் என பேசியிருப்பார். அந்தப் படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வெற்றி தான் படத்தை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது அறிந்தும் அறியாமலும் படத்தின் வெற்றிக்கு தீப்பிடிக்க பாடல் தான் முக்கிய காரணம் என்று விஷ்ணுவர்தனும் பேசியிருக்கிறார்கள். இப்படி பல புதுமுகங்களின் படங்கள் யுவன் இசையால் கவனம் பெற்றிருக்கின்றன.
விஜய் – யுவன் காம்போ
புதிய கீதை படம் தான் விஜய் – யுவன் இணைந்த முதல் படம். மெர்குரி பூவே, வசியக்காரா, அண்ணாமலை தம்பி போன்ற பாடல்கள் ஹிட்டடித்தன. இருப்பினும் அந்தப் படத்தின் தோல்வியினால் அவர்களது காம்போ தொடர வில்லை. விஜய்யும் யுவனும் இணைய வேண்டும் என்பது இருவரது ரசிகர்களுக்கும் நீண்ட நாள் ஏக்கமாக இருந்தது. அது வெங்கட் பிரபுவின் தி கோட் படத்தின் மூலம் நிறைவேறியது. கோட் படத்தில் யுவன் இசையில் விசில் போடு, சின்ன சின்ன கண்கள் என இரண்டு பாடல்களை விஜய் பாடியிருந்தார்.
கோட் படத்துக்கு முன்பே யுவன் இசையில் விஜய் பாடியிருக்கிறார். ஆனால் அது விஜய் ஹீரோவாக நடித்த புதிய கீதை படம் இல்லை. அதற்கு முன்பே விக்னேஷ் ஹீரோவாக நடித்த வேலை என்ற படத்தில் யுவனுக்காக விஜய் பாடியிருக்கிறார். இந்தப் படத்தை மாதவனின் என்னவளே, மம்முட்டியின் ஜுனியர் சீனியர் படங்களின் இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் காலத்துக்கு ஏத்த ஒரு கானா என்ற பாடலை நாசர், பிரேம்ஜியுடன் இணைந்து விஜய் பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.