‘குட் பேட் அக்லி’யில் அஜித்தின் சட்டையின் விலை இவ்வளவா? ஆச்சரிய தகவல்
Good Bad Ugly: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள சர்ட் தற்போது பிரபலமாகியுள்ளது. இந்த சர்ட் குறித்து உடை வடிவமைப்பாளர் அனுவர்தன் சொன்ன தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அஜித் குமார்
அஜித் குமார் (Ajith Kumar), திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முதல் நாள் முதல் காட்சி பார்த்த அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு முழுக்க கமர்ஷியல் ஹீரோவாக ரசிகர்களுக்கு திருப்தி அளித்திருக்கிறார். ஒரு அஜித் ரசிகராக, ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படத்தை அளித்திருக்கிறார் ஆதிக். காட்சிக்கு காட்சி மாஸான அஜித்தை திரையில் காண்பித்திருக்கிிறார் ஆதிக். இதற்காகவே காத்திருந்தது போல திரையரங்கில் கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் – சிம்ரன் இணைந்து நடித்திருந்தது படத்தின் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
அதே போல இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் மற்ற சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் இந்தப் படம் ரசிகர்களை குறி வைத்தே எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் முழுக்க அஜித்தின் முந்தய படங்களின் ரெஃபரன்ஸ்கள் இடம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அஜித் சட்டையின் விலை இவ்வளவா?
இந்த நிலையில் இந்தப் படத்தில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள அனுவர்தன் இந்தியாகிளிட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் அஜித் அணிந்திருக்கும் பிரிண்ட்டட் சர்ட் ரூ.1 லட்சம் என சொல்லப்படுவது உண்மையா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அனுவர்தன், நீங்கள் சொல்வது உண்மை தான். அந்த சட்டை 1 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இயக்குநர் விஷ்ணுவர்தனின் மனைவியான அனுவர்தன், பில்லா படம் தொடங்கி அஜித்தின் பல படங்களுக்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பில்லா படத்தில் அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றத்துக்கு அனுவர்தனும் ஒரு முக்கிய காரணம். அஜித் மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் இவர் உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமாகும் நடிகர்களின் உடை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோர் அணிந்து வந்த பால்மேன் டீசர்ட் மிகவும் பிரபலமாகி பின்னர் டிரெண்டாக மாறியது. பின்னர் சந்தைகளில் அதன் சாயலில் வெளியான டீசர்ட்டை இளைஞர்கள் அணியத் தொடங்கினர். இந்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி சர்ட்டும் பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விஸ்வாசம் என அஜித்தின் கமர்ஷியல் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அவர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களுக்கு கிடைப்பதில்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. இதனையடுத்து அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.