எம்.எல்.ஏ. பதவியேற்பில் பரபர.. வெற்றிசான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா!
Tvk Minister Keerthana: தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகாசி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான கீர்த்தனா வெற்றி சான்றிதழை எடுத்து வர மறந்து விட்டார். இதனால், அவரால் பதவி ஏற்க முடியாமல் போனது.

வெற்றி சான்றிதழை மறந்து வந்த கீர்த்தனா
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், டி. நகர் எம்எல்ஏவுமான என்.ஆனந்த் எம்எல்ஏவாக பதவியேற்றார். இதே போல, ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி. ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். இதில், சிவகாசி தொகுதி எம்எல்ஏவான கீர்த்தனா பதவி ஏற்க வந்திருந்தார். ஆனால், அவர் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழை எடுத்து வர மறந்திருந்தார்.
வெற்றி சான்றிதழை மறந்து வந்த அமைச்சர்
இதன் காரணமாக கீர்த்தனாவால் எம்எல்ஏ பதவி ஏற்க முடியாமல் போனது. இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 17 சி படிவம் என்ற வெற்றி சான்றிதழை வழங்கி இருந்தனர். இந்த சான்றிதழை எம்எல்ஏ பதவி ஏற்கும் போது, கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு கட்சிகள் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக வெற்றி கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களது வெற்றி சான்றிதழை சட்டப்பேரவை செயலரிடம் சமர்ப்பித்து எம்எல்ஏ பதவி ஏற்புக்கான உறுதி மொழியை ஏற்று பதவி ஏற்று கொண்டனர்.
சிவகாசி தாெகுதி எம்எல்ஏவால் பதவி ஏற்க முடியாமல் போனது
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகாசி தொகுதி பெண் எம்எல்ஏவான கீர்த்தனா தனது வெற்றி சான்றிதழை எடுத்து வர மறந்ததால் அவர் பதவியேற்க முடியாமல் போனது. மேலும், வெற்றி சான்றிதழை கொண்டு வருவதற்காக அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை செலலரிடம் வெற்றி சான்றிதழை சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா சமர்ப்பித்த பின்னர் எம்எல்ஏவாக பதவி ஏற்பார் என்று சட்டப்பேரவை நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
தவெக அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர்
தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் வியூக வகுப்பாளரான கீர்த்தனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். அதன்படி, அந்த தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. இதன் மூலம், விஜய் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர் என்ற பெயரையும் சிவகாசி தொகுதி எம்எல்ஏ கீர்த்தனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.