விஜய் பிரச்சாரம் பயணத்தில் மாற்றம்.. செப். 27 சென்னையில் பிரச்சாரம் இல்லை..

TVK Leader Vijay Campaign: அடுத்த சனிக்கிழமை அதாவது செப்டம்பர் 27, 2025 அன்று, வட சென்னையில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் நாமக்கல் மற்றும் சேலத்தில் நான்கு இடங்களில் மக்களை சந்திக்கவும், இரண்டு இடங்களில் விஜய் உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரம் பயணத்தில் மாற்றம்.. செப். 27 சென்னையில் பிரச்சாரம் இல்லை..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Sep 2025 07:22 AM

 IST

செப்டம்பர் 20, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தைப் பொருத்தவரை, தலைவர் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில், நாளொன்றுக்கு மூன்று மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் மக்களின் நலனையும் கூட்ட நெரிசலையும் கருத்தில் கொண்டு, அதை இரண்டு மாவட்டங்களாகக் குறைக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னைக்கு பதிலாக நாமக்கல்:

இந்த சூழலில், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி வட சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நாமக்கல்லில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூலிக்கப்படுவது ஏன்? – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

செப்டம்பர் 13, 2025 அன்று, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சார சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். திருச்சியில் இருந்து தொடங்கிய அவர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மக்களை சந்தித்து பரப்புரையாற்றினார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரம்பலூர் மாவட்டப் பயணம் ரத்து செய்யப்பட்டது. வேறு ஒரு நாளில் பெரம்பலூர் பயணம் இருக்கும் எனவும் கழகத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.

நாகை திருவாரூரில் விஜய் பிரச்சாரம்:

இந்த சூழலில், செப்டம்பர் 20, 2025 அன்று, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

Also Read: எகிறும் எதிர்பார்ப்பு.. நாகை, திருவாரூரில் விஜய் இன்று பிரச்சாரம்!

நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, சிறப்பு குழு அதாவது ஏற்பாட்டாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்பாட்டாளர் குழு, அந்த மாவட்டங்களில் பிரச்சாரப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், பிரச்சார வாகனத்தை பின்தொடராத வகையிலும், பாதுகாப்பான முறையிலும், உரிய நேரத்தில் பிரச்சாரத்தை முடிப்பதற்காகவும் இந்த குழு செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மற்றும் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மனு:

இந்த சூழலில், அடுத்த சனிக்கிழமை அதாவது செப்டம்பர் 27, 2025 அன்று, வட சென்னையில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நாமக்கல் மற்றும் சேலத்தில் நான்கு இடங்களில் மக்களை சந்திக்கவும், இரண்டு இடங்களில் விஜய் உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.