தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு.. கட்சி கடந்து வந்த பாதை..
TVK Second State Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21, 2025) மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. இதறகான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சியின் மாநாட்டிற்கு குறைந்தது 5 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
மதுரை, ஆகஸ்ட் 20, 2025: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரக்கூடிய 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் இருக்கக்கூடிய பாரபத்தியில் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்று கூறலாம். தமிழக வெற்றிக்கழகம் என்பது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்டது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கட்சி தொடங்கிய அடுத்த மாதமே அதாவது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. விஜய் கட்சியை தொடங்கியதும் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் என்னவாக இருக்கும் எந்த கட்சியை சார்ந்து தமிழக வெற்றி கழகம் நடைபெறும் என பல்வேறு கேள்விகள் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சிஏஏ சட்டத்திற்கு எதிராக முதல் அறிக்கையை விஜய் வெளியிட்டார். இதன் மூலம் அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஒரு கொள்கையை கொண்ட கட்சியாக இருக்கும் என பேசப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கடந்து வந்த பாதை:
அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி சரியாக ஒரு ஆண்டுக்கு முன் கட்சியின் கொடி மற்றும் கொள்கை பாடல் அறிமுகமானது. ஆனால் கட்சி கொடியில் இருக்கக்கூடிய யானை சின்னத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத தொடர்ந்து ஆகஸ்ட் 27, 2024 ஆம் ஆண்டு கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இருக்கக்கூடிய வி சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் முறையாக மக்களை சந்தித்து பேசினார்.
அதாவது இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் வெளியானது. அதில் கொள்கை எதிரியாக பாரதிய ஜனதா கட்சியும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்தார் தலைவர் விஜய். இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. முக்கியமாக முதல் மாநாட்டிலேயே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியை மறைமுகமாக கூட்டணிக்கு அழைத்தார். ஆனால் தலைவர் விஜயின் கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிராகரித்தார்.
மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் தலைவர் விஜய்:
பின்னர் தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் நடைபெறும் பல்வேறு மக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் படிக்க: தவெக மாநாடு.. களமாட காத்திருக்கும் விஜய்.. இதுதான் ஹைலைட்!
பின்னர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோரை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். பின்னர் 2025 ஜூலை மாதம் அஜித் குமார் என்பவர் காவல் விசாரணையின் போது உயிரிழந்ததை கண்டித்து தமிழக வெற்றி கழகம் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் தலைவர் விஜயின் பங்கேற்றார். இதற்கிடையில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மை டி.வி.கே என்ற செயலையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்.. வைகோ அதிரடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு:
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை அதாவது ஆகஸ்ட் 21 2025 அன்று நடைபெற உள்ளது. முதலில் இந்த மாநாடு ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெற இருந்தது. ஆனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதற்கான அனுமதி கொடுக்கப்படாத நிலையில் ஆகஸ்ட் 21 2025 அன்று நடைபெறுகிறது. கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் முதல் மாநாட்டிலும் சரி தற்போதும் சரி தலைவர் விஜய் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் இருப்பவர்கள், முதியவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தபடியே நேரலையில் மாநாட்டை பார்க்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அங்கு மாநாட்டிற்கு வரக்கூடிய அனைவரையும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மாநாட்டில் சிறப்பு ஏற்பட்டுகள்:
மாநாட்டில் பெண்களுக்கு என பிரத்தியேகமாக மூன்று அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவசர மருத்துவ சேவைக்காக 500 மருத்துவர்களும் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவ உபகரணங்கள் அல்லது மருத்துவ பொருட்களை கூட்டத்திற்குள் எடுத்துச் செல்வதற்காக ட்ரோன் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாநாட்டில் தண்ணீர் இல்லாமல் பலரும் தவித்ததாக தகவல் இருந்த நிலையில் மாநாட்டிற்காக தனி குடிநீர் குழாயும், குடிநீர் பாட்டில்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.