சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் தலைவர் விஜய்.. திடலில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்..
TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு தலைவர் விஜய் வருகை தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டுத் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

கோப்பு புகைப்படம்
மதுரை, ஆகஸ்ட் 21, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டுத் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர். மாநாடு முழுவதும் மக்கள் தலைகளால் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்ட செயலாளர் கூட்டங்கள், ஒருங்கிணைப்பாளர் கூட்டங்கள் என தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதே சமயத்தில், உறுப்பினர் சேர்க்கைக்காக சமீபத்தில் “மை டிவிகே” என்ற செயலியை கட்சி தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியிருந்தார்.
மதுரையில் நடக்கும் இரண்டாவது மாநாடு:
இந்த நிலையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று, அதாவது ஆகஸ்ட் 21, 2025 அன்று, மதுரையில் இருக்கக்கூடிய பாரபத்தியிலில் நடைபெறுகிறது. இதற்காக பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 506 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டை அமைத்துள்ளனர். இந்த மாநாட்டு திடலில் தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகை தந்தவுடன் மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி மாநாட்டை தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நிரம்பி வழியும் மாநாட்டு திடல்.. தமிழகமே திரும்பி பார்க்கும் கூட்டம்!
மக்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் வாக் அமைப்பு:
ஆகஸ்ட் 20, 2025 அன்று, 100 அடி கொடிக்கம்பம் நடும் முயற்சி செய்யும் பொழுது அந்த கொடிக்கம்பம் கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து தற்போது தற்காலிகமாக சிறிய கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, முதல் மாநாட்டைப் போலவே இரண்டாவது மாநாட்டிலும் தலைவர் விஜய் மேடையில் இருந்து மக்களை சந்திக்கும் வகையில் சுமார் 300 மீட்டர் நீள ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 10 அடி உயரத்தில் அந்த ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள் எங்கிருந்தாலும் தலைவர் விஜயை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு:
மேலும், பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கிய இந்த மாநாட்டிற்காக நேற்று இரவு முதலே தொண்டர்கள் வருகை தரத் தொடங்கினர். முதலில் கலை நிகழ்ச்சிகள் வைத்து இந்த மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில் சுமார் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம், தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான தீர்மானம், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்:
முக்கியமாக, தலைவர் விஜய் முதல் மாநாட்டிலிருந்தே, கைக்குழந்தைகள் உடன் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், உடல்நிலை குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், சிலர் குழந்தைகளுடன் மாநாட்டிற்கு வந்திருந்தனர். அப்போது, அங்கு இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களை பத்திரமாக வெளியேற்றினர்.
தவிர, மாநாடு நடைபெறும் இடத்தில் சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டாலும், மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அங்கு அவசர நிலைக்கான ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.