Kolathur Election Result: முதல்வர் ஸ்டாலினின் கோட்டையாக இருக்கும் கொளத்தூர் தொகுதியின் நிலவரம் என்ன? யாருக்கு சாதகம்?
kolathur Assembly Election Result 2026: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் பி.சந்தானகிருஷ்ணன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சறுக்கல்களைச் சரிசெய்து, முதல்வர் தொகுதியிலேயே அவருக்குக் கடும் நெருக்கடி கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதேபோல், தவெக உள்ளிட்ட புதிய கட்சிகளின் வரவு வாக்கு வங்கியில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கொளத்தூர் தேர்தல் முடிவுகள்
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவான இத்தொகுதி, தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டையாகத் திகழ்கிறது. தொடர்ந்து, 3 முறை (2011, 2016, 2021) போட்டியிட்டு, மூன்று முறையும் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தனது வெற்றி வித்தியாசத்தை கணிசமாக உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், 2026 தேர்தலில் 4வது முறையாக அவர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
முதல்வரை எதிர்த்து களம் காணும் வேட்பாளர்கள்:
இதனிடையே, இத்தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் பி.சந்தானகிருஷ்ணன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சறுக்கல்களைச் சரிசெய்து, முதல்வர் தொகுதியிலேயே அவருக்குக் கடும் நெருக்கடி கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் அ.சௌந்தரபாண்டியன் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் இத்தொகுதியில் களம் காண்கின்றனர். புதிய கட்சிகளின் வரவு வாக்கு வங்கியில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும்:
முதலமைச்சர் தொகுதி என்பதால் இங்கு அடிப்படை வசதிகள் மற்ற தொகுதிகளை விடச் சிறப்பாக இருப்பதாக மக்கள் கருதினாலும், இன்னும் தீர்க்கப்படாத சில நீண்ட காலப் புகார்கள் உள்ளன. கொளத்தூர் ஏரிப் பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்பது முக்கியமான கோரிக்கையாக உள்ளது. கொளத்தூர் மெயின் ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் (20 அடிக்கும் குறைவு), சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் அவசியமாகிறது. வில்லிவாக்கம், கோயம்பேடு போன்ற இடங்களுக்கு நேரடி சிற்றுந்து வசதிகள் தேவைப்படுகின்றன.
மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டிருந்தாலும், ஜி.கே.எம் காலனி மற்றும் ஜவஹர் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் வடிகால் அமைப்புகளைச் சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. பெ பெரியார் நகர் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டாலும், தொகுதியின் உட்புறப் பகுதிகளில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வெற்றி வாய்ப்பு எப்படி?
முதல்வர் என்ற அந்தஸ்தும், தொகுதியில் தொடர்ந்து அவர் மேற்கொண்டு வரும் “மக்களுடன் முதல்வர்” போன்ற நேரடிச் சந்திப்புகளும் ஸ்டாலினுக்குப் பெரும் சாதகமாக உள்ளன. இருப்பினும், பட்டா விவகாரம் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் பிரிந்து நிற்பது திமுகவிற்குச் சாதகமாக இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய வரவுகள் இளைஞர்களின் வாக்குகளைப் பிரிக்குமா என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவு அமையும். தற்போதைய நிலவரப்படி, தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் ஸ்டாலினின் கை ஓங்கியே காணப்படுகிறது.