”விஜய் எங்களுக்கு தம்பி, இந்த உறவு இப்போது உருவானது அல்ல” – பிரேமலதா விஜயகாந்த்..
Premalatha Vijayakanth On Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தலைவர் விஜய் கேப்டன் விஜயகாந்த் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த, “ விஜய் எங்களுக்கு தம்பி, இந்த உறவு பலகாலமாக இருந்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
கடலூர், ஆகஸ்ட் 22, 2025: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “. கேப்டன் விஜயகாந்த் அவருக்கு அண்ணன் என்றால், விஜய் எங்களுக்கு தம்பி. இந்த உறவு அரசியலுக்கு வந்த பிறகு உருவானது அல்ல; திரையுலகிலிருந்தே தொடர்ந்து வருகிறது” என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார். குறிப்பாக, “மதுரை என்றாலே நினைவுக்கு வருவது ஒன்றே ஒன்று — அது கேப்டன் விஜயகாந்த். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்த் உடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கேப்டன் விஜயகாந்தும் இந்த மண்ணைச் சேர்ந்தவர் தான். மதுரை மண்ணைச் சேர்ந்த இவரை எப்படி மறக்க முடியும்?
தமிழக அரசியலையே மாற்றும் மாநாடாக இது இருக்கும். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி என் தலைவர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த் தான்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Also Read: ‘விஜய் இன்னும் வளரவில்லை’ – சரத்குமார் ரியாக்ஷன்
2026 சட்டமன்ற தேர்தல் – சூடு பிடிக்கும் அரசியல் களம்:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. தமிழக அரசியலில் தற்போது அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் தரப்பில் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற வெற்றி கழக மாநாடு முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கேப்டன் விஜயகாந்தை அண்ணன் என குறிப்பிட்டதற்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். தற்போது அவர் “உள்ளம் தேடி இல்லம் நாடி” எனும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், “கேப்டன் ரத யாத்திரை, மக்களை தேடி மக்கள் தலைவர்” என்ற பெயரிலும் இந்தப் பிரச்சார யாத்திரை நடைபெற்று வருகிறது.
Also Read: ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சி பதவி.. பா.ம.கவில் அதிரடி டிவிஸ்ட்..
விஜய் எங்களுக்கு தம்பி – பிரேமலதா விஜயகாந்த்:
அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடைபெற்ற பிரச்சாரப் பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரை மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர், விஜயகாந்தை அண்ணன் என குறிப்பிட்ட நிலையில், விஜய் எங்களுக்கு தம்பிதான். இது அரசியலுக்குப் பிறகு உருவான உறவல்ல; சினிமா காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. மேலும், தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி தொடர்பாக ஜனவரியில் நடத்தப்படும் மாநாட்டில் அறிவிப்போம்” என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தேமுதிக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற சூழலில், “விஜய் எங்கள் தம்பி” என கூறியிருப்பது, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.