தேர்தல் ஆணையம் “யு-டர்ன்”.. மீண்டும் ஊழல் தடுப்பு டிஜிபியாகும் டேவிட்சன்.. என்ன காரணம்?
Davidson Devasirvatham Reappointed: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மூத்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபியாக மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ளது.

டேவிட்சன் தேவாசீர்வாதம் ஊழல் தடுப்பு டிஜிபியாக நியமனம்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதன் காரணமாக, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திடும் வகையில் அரசு துறைகளில் உள்ள மூத்த அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் உத்தரவின்பேரில், அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, மேற்கண்ட பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டனர். இதில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு புகார் கடிதம்
இந்த நிலையில், திமுக மக்களவை உறுப்பினரும், நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான டி. ஆர். பாலு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டது குறித்தும், பாஜக, ஆர். எஸ். எஸ். ஆதரவாளரான சந்தீப் மிட்டலை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்ட உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் எனவும், அவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அந்த கடித்ததில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் படிக்க: தேர்தலுக்கு பின் திமுக சிதறும்.. “கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்”.. புயலை கிளப்பிய அண்ணாமலை!!
மீண்டும் ஊழல் தடுப்பு டிஜிபியாக நியமனம்
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றதுடன், தமிழகத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தலைமை இயக்குனராக மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக ஆயுதப்படை டிஜிபியாக செயல்பட்டு வரும் சந்தீப் மிட்டல் அதே பதவியில் தொடர்வார் என்றும், அவரிடம் கூடுதலாக வழங்கப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பொறுப்பு பெறப்பட்டு டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் விவகாரம்
இதனிடையே, தமிழக நகராட்சி மற்றும் நிர்வாக துறையில் ரூ.1000 கோடி ஊழல் நிகழ்ந்திருந்ததாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டது பேசும் பொருளானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தலைமை செயலர் – டிஜிபி வரிசையில் உள்துறை செயலர் மாற்றம்.. கோட்டையில் அதிரும் புதிய நியமனங்கள்!