நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. பாமகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்..
PMK Nomination: மிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 14, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தரப்பில், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், கடந்த சில மாதங்களாக தந்தை மற்றும் மகன் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. அதாவது, அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே கட்சியின் கட்டுப்பாடு யார் வசம் என்பது தொடர்பாக போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அன்புமணி தனியாகவும், ராமதாஸ் தனியாகவும் கட்சி செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அன்புமணி பனையூரில் தலைமையக அலுவலகத்தையும், ராமதாஸ் தைலாபுரத்தில் தலைமையக அலுவலகத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், தேர்தல் ஆணையம் தரப்பில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு, அவருக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்?.. அதிமுக உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றியதால் பரபரப்பு!!
அன்புமணி தரப்பு பாமகவில் இன்று முதல் வேட்பமனு பெறப்படு:
தந்தை–மகன் இடையே உள்ள மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாமக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலை பாமக இரண்டு பிரிவுகளாக சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அன்புமணி தரப்பில் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக, வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், தங்களது விருப்ப மனுக்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெகவின் வேட்பாளர் அறிமுகம் இன்று முதல் தொடக்கம்? பரபரக்கும் அரசியல் களம்!!
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 20 ஆம் தேதி கடைசி நாள்:
தினசரி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை பெற்றுப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20, 2025 அன்று மாலை 6 மணிக்குள் பூர்த்தி செய்த மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.