மதுரையில் நடக்கும் த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு.. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

School College Leave: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நாளை மதுரையில் பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடக்கும் த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு.. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Aug 2025 17:57 PM

மதுரை, ஆகஸ்ட் 20, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டை கருத்தில் கொண்டு, மாநாட்டை ஒட்டியுள்ள எலியார்பத்தி, வலையன்குளம், காரியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம்தோறும் சென்று நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதேவேளை கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார்.

இத்தகைய சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளதால், தமிழக வெற்றி கழகம் மிகுந்த கவனம் பெறுகிறது. தமிழகத்தின் உச்சநட்சத்திரமான விஜய் இந்தக் கட்சியை தொடங்கியிருப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு, விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்றனர். முதல் மாநாடு பெரும் பேசுபொருளாக மாறியது. அப்போது தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்தார்.

மேலும் படிக்க: த.வெ.க மாநாடு.. அடுத்தடுத்த சோகம்.. 100 அடி கொடி கம்பம் விழுந்து நொறுங்கிய கார்.. ..

த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு – ஏற்பாடுகள் என்ன?

முதலில் மதுரையில் நடைபெற இருந்த அந்த மாநாட்டிற்கு அப்போது அனுமதி வழங்கப்படாததால், விக்கிரவாண்டியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, தென் மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் பலத்தை நிரூபிக்கும் வகையில், இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் மாநாட்டில், தலைவர் விஜய் மேடையில் இருந்து மக்களை சந்திக்க “ரேம்ப் வாக்” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல, இம்மாநாட்டிலும் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு “ரேம்ப் வாக்” நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு.. கட்சி கடந்து வந்த பாதை..

எம்.ஜி.ஆர் – அண்ணா உடன் விஜய்:

முக்கியமாக, இம்மாநாடு நடைபெறும் மேடையின் மேல்பகுதியில், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்களுடன் தலைவர் விஜய் இருப்பது போன்ற புகைப்பட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது – விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என எழுதப்பட்டுள்ளது. இந்த மாநாடு, ஆகஸ்ட் 21, 2025 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடைபெற உள்ளது. .

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதனை முன்னிட்டு, மாநாட்டை ஒட்டியுள்ள எலியார்பத்தி, வளையங்குளம், காரியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, அதாவது ஆகஸ்ட் 21, 2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மாநாட்டிற்கு காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.