அய்யா பாமக என்ற புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
Ramadoss New Party: இத்தகைய சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக தந்தை-மகன் இடையேயான மோதல் அதிகரித்து, கட்சி இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. கட்சியின் சின்னம், கொடி, பெயர் பயன்படுத்துவது தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 25, 2026: பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, “ஐயா பாசறை மக்கள் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. கூடுதலாக, சமீபத்தில் ராமதாஸ் மற்றும் சசிகலா புதிய கூட்டணி அமைத்துள்ளனர்.
இரண்டாக பிரிந்த பாமக:
இத்தகைய சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக தந்தை-மகன் இடையேயான மோதல் அதிகரித்து, கட்சி இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. கட்சியின் சின்னம், கொடி, பெயர் பயன்படுத்துவது தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிவில் நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்து, மூன்று நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
ஐயா பாமக என்ற கட்சியை தொடங்கிய ராமதாஸ்:
இந்த நிலையில், அடுத்த கட்டமாக ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. தற்போது, “ஐயா பாசறை மக்கள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுருக்கமாக “ஐயா பாமக” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் மூலம் தேர்தலை சந்திக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், “ஐயா பாமக” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் மூலம் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். ராமதாஸ் தரப்பில் தலைமை நிலைமை செயலாளராக உள்ள அன்பழகனின் மகன் முகிலன் பெயரில் இந்த கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஏற்கனவே தேர்தல் ஆணையம் கட்சி சின்னம் உள்ளிட்ட விஷயங்களில் அன்புமணிக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால், மாற்று திட்டமாக இந்த புதிய கட்சியின் பெயரில் போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.