நிறைவுபெறும் தேர்தல் பிரச்சாரம்.. மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள்..
கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களது சொந்த தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் தங்களது பிரச்சாரங்களை நிறைவு செய்கின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 21, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று மாலை 6.00 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
இன்று மாலை 6 மணிக்கு முடியும் பரப்புரை:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 20 நாட்களாக தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்ற நிலையில், இன்று மாலை 6.00 மணியுடன் அவை நிறைவு பெறுகின்றன.
மேலும் படிக்க: தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்.. அனைவரும் வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி
இதனால், கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களது சொந்த தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் தங்களது பிரச்சாரங்களை நிறைவு செய்கின்றனர்.
தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்:
தேர்தலைச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தரப்பில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- அதன்படி, இன்று மாலை 6.00 மணிக்கு மேல் யாரும் கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மேற்கு வங்கத்தின் இறுதி கட்ட தேர்தல் முடிந்த பின், அதாவது 29ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அதில், 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23ஆம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126 விதிமுறைகள் அமலில் இருக்கும். இதன்படி, தேர்தல் தொடர்பான எந்த பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலமும் நடத்தவோ, ஒருங்கிணைக்கவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.
- திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு பகிரக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்து மின்னணு தகவல் தொடர்புகளும் இதற்கு உட்படும்.
- பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்கு நிகழ்ச்சி அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த விதிமுறைகளை மீறினால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும்.
- மேலும், தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதோர், இன்று மாலை 6.00 மணிக்குப் பிறகு அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
- கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6.00 மணிக்குப் பிறகு செல்லுபடியாகாது.
- வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மட்டுமே, அதிகபட்சம் இரண்டு நபர்களுடன் தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி வழங்கப்படும். தேவையற்ற கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது.