இனி தங்கத்தை போல வெள்ளியையும் அடகு வைத்து கடன் வாங்கலாம்.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!
RBI Silver Loan Rules | இதுவரை தங்கத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வந்த நிலையில், இனி வெள்ளி பொருட்கள் மற்றும் நாணயங்களையும் அடகு வைத்து கடன் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியர்களை பொருத்தவரை கையில் கொஞ்சம் பணம் இருந்தாலே அவர்கள் உடனடியாக தங்கத்தை வாங்கி வைத்துவிடுவர். அதற்கு காரணம் தங்கத்தின் மீதான ஈர்ப்பு மட்டுமல்ல, அதனை அவசர தேவைகளுக்கான ஆதாரமாகவும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது, தங்க நகைகளை வாங்கும் பொதுமக்கள் தங்களுக்கு எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி தேவைகளின் போது அதனை அடகு வைத்து பணத்தை பெற்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். பின்னர், மாத தவணை முறையிலோ அல்லது மொத்தமாகவோ பணத்தை திருப்பி செலுத்தி தங்களது தங்க நகைகளை பெற்றுக்கொள்கின்றனர். தங்கத்தை மட்டுமன்றி, வெள்ளியையும் அடகு வைத்து உங்களால் கடன் பெற முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம்
வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தனிநபர் கடனை விடவும், நகை கடனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. காரணம், ஒருவேளை கடனை வாங்கிய நபர் அதனை திருப்பி செலுத்தவில்லை என்றால் அதற்கான தொகையை அந்த நகையை வைத்து சரிசெய்துக்கொள்ளும். இதன் காரணமாக தங்க நகை கடனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதுவரை தங்க நகைகளை வைத்து மட்டுமே வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி வெள்ளி பொருட்களையும் வைத்து கடன் பெற இந்திய ரிசர்வ் வங்கி வழிவகை (RBI – Reserve Bank Of India) செய்துள்ளது.
இதையும் படிங்க : Personal Loan-ஐ மையப்படுத்தி நடைபெறும் மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?




ஏப்ரல் முதல் வெள்ளிக்கும் கடன் பெறலாம்
இந்திய ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளி கடன்களுக்கான வழிகாட்டுதல் என்ற பெயரில் சுற்றரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2026, ஏப்ரல் மாத முதல் தங்கத்தை போலவே வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, வெள்ளியை அடகு வைத்து கடன் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : அறிமுகமானது இ ஆதார் செயலி.. இத்தனை சிறப்பு அம்சங்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
வெள்ளி நாணயங்கள், நகைகளுக்கான கடன்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இனி தங்கத்தை போலவே வெள்ளியையும் வாங்கிக்கொண்டு கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளது . வெள்ளியை பொருத்தவரை நகைகள் மற்றும் நாணயங்களை மட்டுமே வைத்து கடன் பெற முடியும். வெள்ளி நகைகள் என்றால் 10 கிலோ வரையும், வெள்ளி நாணயங்கள் என்ற 500 கிராம் வரையிலும் அடகு வைத்து கடன் பெறலாம். ரூ.2.5 லட்சம் மதிப்பிலான கடன்களுக்கு 85 சதவீதம் வரையிலும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 80 சதவீதம் வரையிலும், ரூ.5 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு 75 சதவீதம் வரையிலும் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.