Form 16 : ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி ?
ITR Without Form 16 : வருமான வரி தாக்கல் செய்ய ஃபார்ம் 16 சான்றிதழ் மிகவும் அவசியம். இந்த நிலையில் ஃபார்ம் 16 இல்லாமலும் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது எப்படி செய்வது என்பது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வருமான வரி (Income Tax) தாக்கல் என்பது நாட்டின் சட்டப்படி வருமானம் பெறும் அனைவருக்குமான கடமை. குறிப்பாக மாத சம்பளம் பெறும் ஊழியர்கள், வருடத்துக்கு ஒரு முறை தங்களது வருமானத்தை ஒழுங்காகக் கணக்கிட்டு வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது நம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதோடு,மக்கள் பல நன்மைகளை பெறவும் உதவுகிறது. இந்த நிலையில் ஜூலை 31, 2025 அன்று வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் Form 16 பெறுவது கட்டாயம். மேலும் Form 16 இல்லாமலும் வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஃபார்ம் 16 என்றால் என்ன?
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) விளக்கப்படி, “Form 16 என்பது ஒரு நிறுவன ஊழியருக்கு வழங்கப்படும் சான்றிதழ். இதில் அவர் சம்பளமாக பெற்ற தொகையும், ஆண்டு முழுவதும் அதற்காக பிடித்தம் செய்யப்படும் வரி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த ஆவணம், நிறுவனத்தின் காலாண்டு அடிப்படையில் வருமான வரி தாக்கல் செய்யப்படுவதன் அடிப்படையில் உருவாக்கப்படும். இது ஒரு ஊழியரின் Form 26AS மற்றும் ஆண்டுதோறும் வெளியாகும் வருடாந்திர தகவல் அறிக்கைகளுடன் இணைக்கப்படுகிறது.
ஃபார்ம் 16 இல்லையென்றால் என்ன செய்யலாம்?
Form 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது சிக்கலான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் Form 26AS, நாம் பணியாற்றும் நிறுவனங்கள் வழங்கும் சம்பள விவரங்கள் அடங்கிய பே ஸ்லிப் (Pay Slip) போன்றவற்றவற்றை வைத்து தாக்கல் செய்யப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, கீழ்காணும் ஆவணங்களை வைத்தும் வரி தாக்கல் செய்யலாம்:
-
ஆண்டு முழுக்க பெற்ற மாத சம்பளம் அடங்கிய பே ஸ்லிப்
-
நிறுவனம் அளிக்கும் வரிவிவரங்களின் பட்டியல்
-
வருமான வரி தளத்தில் கிடைக்கும் Form 26AS மற்றும் AIS ஆவணங்கள்
ஃபார்ம் 16 இல்லாமல் டிடிஎஸ் சரிபார்ப்பு எப்படி?
ஃபார்ம் 26AS மற்றும் AIS ஆகியவை வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும். இதில் உங்கள் பான் கார்டை அடிப்படையாகக் கொண்டு, பிடித்தம் செய்யப்பட்ட வரி போன்ற விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். அதன் மூலம் டிடிஎஸ் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். ஃபார்ம் 16 இல்லாமல் தாக்கல் செய்யும் உங்கள் வருமான விவரங்களில் சில மிஸ்ஸாக வாய்ப்பிருக்கிறது. ஃபார்ம் 16 இல்லாமல் வரியை சரியாக கணக்கிடுவது கடினம். இதனால் சில வருமானங்களையும் சலுகைகளையும் தவறவிடும் அபாயம் உண்டு.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)