Food Recipe: மணமணக்கும் இந்திய ரயில்வே மட்டன் கறி.. 15 நிமிடத்தில் செய்வது எப்படி..?
Railway Mutton Curry Recipe: இந்திய ரயில்வே மட்டன் குழம்பு, பிரிட்டிஷ் காலத்தில் ரயில் பயணிகளுக்கு பரிமாறப்பட்ட ஒரு பிரபலமான உணவு. இந்த எளிய செய்முறையில், மட்டனை வேகவைத்து, வெங்காயம், தக்காளி, தயிர் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சேர்த்து மென்மையாகச் சமைக்கப்படுகிறது. காரத்தின் அளவை உங்களுக்கு ஏற்றவாறு சரிசெய்யலாம். வீட்டிலேயே சுவையான ரயில்வே மட்டன் குழம்பை எளிதாகச் செய்து சுவைக்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை மட்டன் (Mutton) விலை அதிகம் என்றாலும், அதன் சுவைக்கு பலரும் எவ்வளவு விலையை கொட்டி சுவைக்கவும் விரும்புகிறார்கள். ஊர் திருவிழாக்களில் ஆட்டுக்கறி விருந்துக்கு பெயர் பெற்றது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் மட்டனுக்கு ஒரு தனிச்சுவை இருந்தாலும், நீங்கள் ரயில்வே மட்டன் கறி (Railway Mutton Curry) குறித்து கேள்விப்பட்டு உள்ளீர்களா..? இந்திய ரயில்வே மட்டன் கறியானது பிரிட்டிஷ் மக்கள் நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்தபோது, அவர்களுக்காக இரவு உணவின்போது சிறப்பாக பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அன்று தொட்டு இன்று முதல் இந்த இந்திய ரயில்வே மட்டன் கறியின் சுவை மிகவும் பிரபலம். அதன்படி, எளிய முறையில் வீட்டிலேயே இந்திய ரயில்வே மட்டன் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முன்னுரை:
பிரிட்டிஷ் மக்களின் மென்மையான சுவையை மனதில் கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்திய ரயில்வேயின் சமையல்காரர்களால் ரயில்வே மட்டன் கறி முதன்முதலில் தயாரித்து பரிமாறப்பட்டது. இதை செய்ய எளிதான பொருட்களே போதுமானது. மேலும், அதிகபட்சமாக 15 நிமிடத்தில் செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மட்டன் – 1/2 கிலோ
- தக்காளி – 3
- வெங்காயம் – 4
- தயிர் – ஒரு கப்
- சீரகம் – 2 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- பிரியாணி இலை – 2
- மிளகு – 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- ஏலக்காய்
- இலவங்கப்பட்டை
- இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் – ஒரு கையளவு
ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?
- கடைகளில் வாங்கிய மட்டனை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து, ஒரு குக்கரில் மட்டனை போட்டு சிறிதளவு மஞ்சள் தூள், கருப்பு மிளகு மற்றும் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 6 முதல் 7 விசில் வரை விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அதனைதொடர்ந்து, மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். அதேபோல், கொத்தமல்லியை உங்களுக்கு தேவையான அளவில் வெட்டி கொள்ளவும்.
- இப்போது, அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றி காய வைத்துக்கொள்ளவும். எண்ணெய் காயந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்றவற்றை வதக்கவும்.
- மசாலா பொருட்கள் வதங்கியதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதற்கு பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி மற்றும் வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும். இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசனை போனதும், தயிர் சேர்த்து கிளறவும்.
- பின்னர் மட்டனைச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாக்களுடன் வரை சமைக்கவும். அவ்வளவுதான், சுவையான இரயில்வே மட்டன் கறி ரெடி.
- பெரும்பாலான பிரிட்டிஷ்காரர்கள் அதிகளவிலான காரத்தை விரும்பமாட்டார்கள் என்பதால், எந்தவொரு மசாலா பொடிகளை சேர்க்கமாட்டார்கள். பச்சை மிளகாய் மற்றும் மிளகின் காரமே பிரிட்டிஷ்காரர்களுக்கு போதுமானதாக இருந்தது.