அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Your Sleep at Risk : காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். குறிப்பாக அலாரம் அடித்ததும் உடனடியாக எழுந்திருக்காமல் இன்னும் சற்றுநேரம் தூங்கலாம் என ஸ்நூஸ் செய்வோம். அப்படி செய்தால் நம் மூளை கடுமையாக பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

உலகம் முழுவதும் அதிகாலையில் அலாரம் வைத்து, அது அடித்ததும் இன்னும் 5 நிமிஷம் தூங்கலாமே… என தங்கள் உறக்கத்தை நீட்டிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இந்த பழக்கம் நம் தூக்கத்தின் தரத்தையும், நாளடைவில் செயல்திறனையும் பாதிக்கக்கூடியது என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மாஸ் ஜெனரல் பிரிகாம் நடத்திய இந்த ஆய்வில் உலகம் முழுவதும் 3 மில்லியனுக்கும் அதிகமான தூக்கம் தொடர்பான தரவுகளை ஆராய்ந்ததில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 21,000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 56 சதவிகிதம் பேர் அலாரம் வைத்து தான் காலையில் எழுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் ஒருவர் அதிகமுறை அலாரத்தை ஸ்நூஸ் (Snooze) செய்தால் அவர் அதிகமாக மோசமான தூக்கத்தை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது அவர் ஒவ்வொருமுறையும் அலாரத்தை ஸ்நூஸ் செய்யும்போது ஒரு 20 நிமிடமும் மோசமான தூக்கத்தை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
மெதுவான தூக்கத்தால் குறைந்த செயல்திறன்
இந்த ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் ரெபெக்கா ராபின்ஸ் கூறுகையில், “தூக்கத்தில் கடைசி நேரம் மிக முக்கியமானது. இது ரெம் (Rapid Eye Movement) கட்டம் என சொல்லப்படுகிறது. இந்த கட்டம் நினைவாற்றலுக்கும், உணர்வுப் பூர்வமான செயலாக்கத்திற்கும் மிகவும் முக்கியமானது. இந்த ரெம் கட்டத்தில் அலாரம் வைத்து எழுவது மூளை செயல்பாடுகளையும், நமக்குத் தேவைப்படும் ஆற்றலையும் பாதிக்கக் கூடியது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இந்த ஆய்வு சில சுவாரசியமான விவரங்களையும் வெளியிட்டது:
-
திங்கள் முதல் வெள்ளி வரை, அலாரம் வைத்து எழும் பழக்கம்
-
சனி, ஞாயிறு நாட்களில் மக்கள் இயல்பாகவே எழுந்துவிடுகின்றனர்.
-
அமெரிக்கா, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிகம் பேர் அலாரம் வைத்து தான் தினமும் எழுகிறார்கள்.
-
ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இது குறைவாகவே உள்ளது.
-
5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்கள், வேலைப்பளு காரணமாக அலாரம் வைத்தவுடன் எழுந்து விடுகிறார்கள்.
இந்த பிரச்னைக்கு தீர்வுகள் என்ன?
நிபுணர்கள் கூறுவதாவது:
-
நீங்கள் எப்பொழுது தூங்கி விழிப்பீர்களோ அதற்கேற்றார் போல அலாரம் வைக்கவும்.
-
அலாரம் அடித்ததும் ஒரே முறையில் எழுந்துவிட முயற்சிக்கவும்.
-
தினசரி ஒரே நேரத்தில் உறங்குவதையும், எழுவதையும் பழக்கமாக்குங்கள்.
-
மென்மையான, அமைதியான காலை பழக்கங்கள் மூலமாக எழும் நேரத்தை எளிமைப்படுத்துங்கள்.
அலாரத்தை ஸ்நூஸ் செய்து, இன்னும் சில நிமிஷங்கள் தூங்கலாம் என்ற பழக்கம் நம்மை இன்னும் அதிகமாக சோம்பலை ஏற்படுத்தும். அடுத்தமுறை அந்த ஸ்நூஸ் பொத்தானை அழுத்துவதற்குள் ஒரு விநாடி யோசிக்கவும். அந்த விநாடியைத் தவறவிட்டால் உங்கள் மூளை மற்றும் உடலுக்கு தீங்காக அது மாறலாம்.