IPL 2025 Rules: ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. நெருங்கும் பிளே ஆஃப்.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!
IPL Playoff Venues: ஐபிஎல் 2025 சீசனில் மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளைத் தொடர்ந்து, பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் 2 மணி நேரம் கூடுதல் நேரம் வழங்கப்படும். பிளே ஆஃப் போட்டிகளின் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். லீக் சுற்று போட்டிகளுக்கும் கூடுதல் நேர விதி பொருந்தும். இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனின் லீக் போட்டிகள் இன்னும் சிறிது நாட்களில் முடிவடையவுள்ளது. இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) போட்டிகளுக்கான சில விதிகளில் மாற்றத்தை கொண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு போட்டிக்கும் இனிமேல் கூடுதலாக 2 மணிநேரம் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக, கடந்த 2025 மே 17ம் தேதி பெங்களூருவில் நடைபெறவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழையால் கைவிடப்பட்டது. இது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை கொடுத்தது. இதையடுத்து, மழைநேரத்தில் குறிப்பிட்டத்தக்க விதியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்போது முதல் அமலுக்கு வருகிறது..?
2025 மே 20ம் தேதியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதன்பிறகு, ஐபிஎல் 2025ன் லீக் சுற்றில் மொத்தம் 8 போட்டிகள் நடைபெறவுள்ளது. இவற்றில் 7 போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. விதிகளின்படி, மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியானது மாலை 650 மணிக்குள் முடிவடைய வேண்டும். அதேநேரத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டி இரவு 10.50 மணிக்கு முடிவடைய வேண்டும்.
புதிய விதிகள்:
புதிய விதிகளின்படி, மதியம் 3.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக மாலை 5.30 மணிக்கு தொடங்கினாலும், ஒரு ஓவர் கூட கட் செய்யப்படாமல் முழுமையாக விளையாடப்படும். அதேபோல், இரவு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக 9.30 மணிக்கு தொடங்கினால், ஒரு ஓவர் கூட கட் செய்யப்படாமல் முழுமையாக நடைபெறும்.
பழைய விதிகளின்படி, 2 மணிநேர கூடுதல் நேர விதியானது பிளேஆஃப் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்படியாக இருந்தது. ஆனால், ஐபிஎல் 2025 போட்டிகள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதாலும், இந்தியாவில் பருவமழை தொடங்கியதால் அதிக ஆட்டங்கள் விளையாட அனுமதிக்கப்பட்டதாலும், லீக் போட்டிகளுக்கும் கூடுதல் நேர விதி பொருந்தும். ஐபிஎல் 2025 இல் இதுவரை 3 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நிலைமைகளில் மாற்றம் (பிரிவு 13.7.3) உடனடியாக அமலுக்கு வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் குறித்து பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் தெரிவித்துள்ளது.
பிளே ஆஃப் போட்டிகளின் இடம் மாற்றம்:
ஐபிஎல் நிர்வாகக் குழு பிளேஆஃப் போட்டிகளுக்கான இடத்தையும் அறிவித்துள்ளது. மழையைக் கருத்தில் கொண்டு போட்டி நடைபெறும் இடமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டி இப்போது 2025 ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதே நேரத்தில் குவாலிஃபையர் 2025 ஜூன் 1 ஆம் தேதி இங்கு நடைபெறும். இது தவிர, முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம் 2025 மே 29 மற்றும் 2025 மே 30 ஆகிய தேதிகளில் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டரை நடத்தும்.