LSG vs SRH: 3 முறை வார்னிங்! மீண்டும் அபிஷேக் சர்மாவுடன் வம்பு.. திக்வேஷ் ரதிக்கு விளையாட தடை!
Digvesh Rathi Match Ban: ஐபிஎல் 2025ன் 61வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், அபிஷேக் சர்மா மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. திக்வேஷின் கொண்டாட்டத்தால் ஆத்திரமடைந்த அபிஷேக், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக, திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டது, மேலும் அபிஷேக் சர்மாவின் போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 61வது போட்டியில் நேற்று அதாவது 2025 மே 20ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், லக்னோ அணியின் பிளே ஆஃப் நம்பிக்கை முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது போட்டியின்போது ஹைதராபாத் தொடக்க வீரரும் அபிஷேக் சர்மாவும் (Abhishek Sharma) , லக்னோ சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதியும் சண்டையிட்டு கொண்டனர். இதனால், திக்வேஷ் ரதி அடுத்த போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது..?
லக்னோ அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். 8வது ஓவர் வீசிய திக்வேஷ் ரதி பந்தில் அபிஷேக் சர்மா அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்த பிறகு திக்வேஷ் ரதி தனது பிரபலமான நோட்புக் கொண்டாட்டத்தை செய்தார். தொடர்ந்து, அபிஷேக் சர்மாவை கிளம்பு கிளம்பு என்று சொல்வதுபோல் சைகை காமித்தார். இதனை பார்த்த அபிஷேக், ரதியின் கொண்டாட்டத்தைக் கண்டு மிகவும் கோபமடைந்தார்.
தொடர்ந்து, அபிஷேக் ரதியிடம் ‘நான் உன் முடியைப் பிடித்து அடிப்பேன்’ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு வீரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் தொடங்கின. இந்த விஷயம் மிகவும் பெரிதாகி, நடுவர்களும் வீரர்களும் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. திக்வேஷின் கொண்டாட்டம் சர்ச்சையால் சூழப்படுவது இது முதல் முறையல்ல. இந்த ‘நோட்புக் கொண்டாட்டத்தை’ ஒழுக்கமின்மை என்று கருதி பிசிசிஐ ஏற்கனவே அவருக்கு இரண்டு முறை அபராதம் விதித்துள்ளது.
அடுத்த போட்டியில் விளையாட தடை:
Lit Abhishek Sharma 🗿🥵🔥 pic.twitter.com/zyBhiQxByJ
— Antara (@AntaraonX) May 19, 2025
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் திக்வேஷ் ரதி லெவல் 1 இல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். தொடர்ந்து, நடப்பு ஐபிஎல் சீசனில் 5 டிமெரிட் புள்ளிகளை திக்வேஷ் பெற்றதால், அவருக்கு 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 2025 மே 22ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திக்வேஷ் ரதி, லக்னோ அணிக்காக விளையாட முடியாது.
அபிஷேக் சர்மாவிற்கு தண்டனை:
சண்டையிட்டதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதி தடை செய்யப்பட்டாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவின் முதல் தவறுக்காக அவரது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.