உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் – எப்படி சரி செய்வது?
Essential Potassium Benefits : பொட்டாசியம் உடலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. பொட்டாசியம் பற்றாக்குறையால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இதய பிரச்னைகள், சோர்வு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலின் சரியான செயல்பாட்டிற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பல வகையான வைட்டமின்கள் (Vitamin) மற்றும் தாதுக்கள் மிகவும் முக்கியம். வைட்டமின் டி, பி16, புரதம் (Protein) மற்றும் இரும்புச்சத்து பற்றி பலருக்குத் தெரியும். ஆனால் இதனுடன், உடலில் சரியான அளவு பொட்டாசியம் (Potassium) சேர்த்துக்கொள்வது நம் ஆரோக்கியமாக இருக்க மிகவும் முக்கியம். பொட்டாசியம் நம் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில், அனைவரின் வாழ்க்கை முறையும் மிகவும் பரபரப்பாக உள்ளது. வீடு மற்றும் அலுவலக வேலைகளை கையாள அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் ஆரோக்கியமற்ற அல்லது தவறான உணவுப் பழக்கம் காரணமாக, உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு ஏற்படலாம்.
பதட்டம் போன்ற சூழ்நிலைகளில் அதிகரிக்கும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துதல், தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் மற்றும் நமது உடலின் செல்களில் நீர் மற்றும் தாதுக்களின் சமநிலையைப் பராமரித்தல் போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு பொட்டாசியம் அவசியம். . உடலில் பொட்டாசியம் அளவை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதன் குறைபாடு காரணமாக, பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
நம் உடலுக்கு பொட்டாசியம் ஏன் முக்கியமானது?
சத்ரபதி சிவாஜி சுபார்த்தி மருத்துவமனையின் மூத்த பொது மருத்துவர் டாக்டர் சுமித் காந்த் கூறுகையில், பொட்டாசியம் ஒரு எலக்ட்ரோலைட் ஆகும், இதன் முக்கிய செயல்பாடு உடலில் மின் அலைகளைக் கட்டுப்படுத்துவதாகும். உடலின் ஒவ்வொரு உயிரணுவும் சரியாகச் செயல்பட இது அவசியம். நடைபயிற்சி, ஓடுதல், சிந்திப்பது அல்லது வேறு எந்த வகையான உடல் செயல்பாடுகளையும் நீங்கள் செய்யும்போது, பொட்டாசியம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆரோக்கியமான நபருக்கு தினமும் 3,500 முதல் 4,700 மி.கி பொட்டாசியம் தேவைப்படுகிறது.
தசை கட்டமைப்பிற்கு, அதாவது தசை சமநிலையை கட்டமைத்தல், வளர்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிற்கு பொட்டாசியம் அவசியம். தசை செயல்பாட்டை பராமரிப்பதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இல்லாமல், தசைகள் பலவீனமடையலாம். இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு பொட்டாசியம் அவசியம். இது வழக்கமான இதயத் துடிப்பைப் பராமரிக்க உதவுகிறது. உடலில் இதன் குறைபாடு இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். பொட்டாசியத்தின் மூன்றாவது முக்கியமான செயல்பாடு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகும். மேலும் இது சோடியத்தின் விளைவை சமநிலைப்படுத்துகிறது.
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் தீமைகள்
உடலில் பொட்டாசியத்தின் அளவு இயல்பை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உடலில் மிகக் குறைந்த அளவு பொட்டாசியம் இருப்பது தசை பலவீனம் அல்லது பிடிப்புகள், சோர்வு மற்றும் சோம்பல், மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்னைகள், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, குழப்பம் அல்லது தலைச்சுற்றல் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும். பொட்டாசியம் குறைபாடு பொதுவாக அதிகப்படியான வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிகப்படியான வியர்வை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த காரணமாகிறது.
உடலில் அதிகப்படியான பொட்டாசியம் அளவு இருப்பது நமது இதய துடிப்பை மெதுவாக்கும். மேலும் சுவாசிப்பதில் சிரமம், குமட்டல் அல்லது பலவீனம் மற்றும் இதய பாதிப்புக்கு கூட வழிவகுக்கும். சிறுநீரகம் உடலில் இருந்து பொட்டாசியத்தை அகற்ற முடியாததாலோ அல்லது சிறுநீரகம் அசரியக வேலை செய்யாமல் இருந்தாலோ இந்த பிரச்னை ஏற்படும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்
இது வாழைப்பழம், ஆரஞ்சு, கிவி, வெண்ணெய் மற்றும் மாம்பழங்களில் காணப்படுகிறது. காய்கறிகளைப் பொறுத்தவரை, கீரை, தக்காளி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீட்ரூட், காளான் மற்றும் இளநீர், பாசிப்பயறு போன்ற பருப்பு வகைகள், பால் தவிர, தயிர், சிறு தானியங்கள போன்றவற்றில் அதிகம் இருக்கிறது. இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் தேவையான அளவு பொட்டாசியத்தை பூர்த்தி செய்ய முடியும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை யார் சாப்பிடக்கூடாது?
பொட்டாசியம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில சுகாதார நிலைமைகள் உள்ளன. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதவர்களுக்கு, உடலில் இருந்து பொட்டாசியத்தை அகற்றுவது கடினமாகிவிடும். எனவே சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பொட்டாசியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.