இன்றைய பொருளாதார சூழலில் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் கட்டமைக்க வேண்டும் என்றால், நமது வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமித்து, அதை சரியான இடங்களில் முதலீடு (Investment) செய்வது மிக முக்கியம். மக்களிடையே முதலீடு குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிஸ்டமாட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) போன்ற திட்டங்களில் மக்கள் முதலீடு செய்யத் துவங்கியிருக்கின்றனர். அந்த வகையில், தினசரி சிப் எனப்படும் புதிய வசதியும் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தினசரி SIP திட்டம் என்றால் என்ன?
தினசரி SIP என்பது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இதில் ஒவ்வொரு பங்கு சந்தை நாட்களிலும் ரூ.100 முதல் ஒரு குறைந்த தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் தாக்கங்களை பொருட்படுத்தாமல், ஒரு சராசரி விலையில் பங்குகளை வாங்க முடிகிறது. இதை ‘ரூபாய் காஸ்ட் ஆவரேஜிங்’ (Rupee Cost Averaging) என்கின்றனர்.
இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது?
Paytm Money, Groww, HDFC Securities போன்ற டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் வாயிலாக தினசரி SIP வசதியை வழங்குகின்றன. முதலீட்டுக்கு முன், உங்கள் நிதி இலக்குகள் மற்றும் இந்த திட்டத்தில் உள்ள அபாயங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். பின்னர், குறைந்தபட்ச தினசரி தொகையை தேர்வு செய்து, வங்கிக் கணக்கு அல்லது யுபிஐ மூலம் தானாகவே தொகையை கழிக்கச் செய்யலாம்.
தினசரி SIP-ன் முக்கிய நன்மைகள்:
- வெறும் ரூ.100 முதல் குறைந்தபட்ச தொகையில் இருந்து முதலீட்டை தொடங்கலாம். மேலும் சில நிறுவனங்களில் ரூ.21-ல் கூட தொடங்க முடியும். இது அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாகும்.
- ஒவ்வொரு நாளும் முதலீடு செய்வதால் நமது சேமிப்பு வளரும்.
- தினசரி முதலீடுகள் சந்தையின் ஏற்ற இறக்கங்களை பாதிக்காது.
- நாம் முதலீடு செய்வது சிறிய தொகைகளாக இருந்தாலும், காலப்போக்கில் நமது தொகை பெரிதாக வளரும்.
ஏன் முதலீடு முக்கியம்?
இந்தியர்களுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நிதி பாதுகாப்பு, அவசர மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் ஓய்வு காலத்துக்கான நிதி தேவை என பல காரணங்களுக்காக முதலீடு அவசியமாகின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், மியூச்சுவல் ஃபண்ட் SIP வாயிலாக ரூ.26,632 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பத்திருப்பதை காட்டுகிறது.
தினசரி SIP என்பது சுலபமானது மற்றும் எதிர்காலத்தில் பொருளாதார தேவைகளுக்கு இது உதவும். மேலும் குறைந்த தொகையில் முதலீட்டை எளிதாக ஆரம்பிக்கலாம் என்பதால் புதீதாக முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. நீண்ட காலத்தில் பெரிய நிதியை உருவாக்கும் இந்த வசதியை நீங்கள் தவறவிடக் கூடாது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)