LPG PRICE: மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலை குறைந்தது!
LPG Price drop: சென்னையில் வணிக சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. மாதத்தின் முதல் நாளான இன்று காலையிலேயே சிலிண்டர் விலை குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. எவ்வளவு விலையில் இருந்து இன்று எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 01: மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. அந்தவகையில், டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
சிலிண்டர்களின் விலை ரூ.4.50 குறைவு:
அதன்படி, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை தீர்மானித்து வருகின்றன. அந்தவகையில், நவம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல்நாளான இன்று குறைத்துள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.4.50 குறைந்துள்ளது.
இதையும் படிங்க : பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் அசத்தல் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
அதாவது, 1,754 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, தற்போது 1,750 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை:
எனினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் சென்னையில் ரூ.868.50 என்ற பழைய விலையிலேயே தொடர்கிறது.