Gold Price : ஒரே நாளில் ரூ.1,320 குறைந்த தங்கம்.. மேலும் விலை குறையும்?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
Gold Price Dropped 1,320 Rupees in a Single Day | தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத விலை உயர்வை அடைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 10, 2025) தங்கம் ரூ.1,320 குறைந்துள்ளது.

மாதிரி புகைப்படம்
கடந்த சில மாதங்களாகவே உலக அளவில் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் நிலை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். அவர்களின் கூற்றின்படி, தங்கம் விலை சரசரவென உயர்ந்து வந்த நிலையில், பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று (அக்டோபர் 10, 2025) ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.1,320 குறைந்துள்ளது.
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக செப்டம்பர் 06, 2025 அன்று தங்கம் விலை கிராம் ரூ.10,000-த்தை தாண்டியது. இதேபோல ஒரு சவரன் ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இது சாமானிய மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தங்கம் விலை மேலும் உயரும் என்றும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர்.
இதையும் படிங்க : நகை பிரியர்களுக்கு ஷாக்.. ரூ.11,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவா?
ஒரே நாளில் ரூ.1,320 குறைந்த தங்கம்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (அக்டோடர் 10, 2025) தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது இன்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை ரூ.1,320 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.11,260-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?
தங்கம் விலை மேலும் குறையும் – வல்லுநர்கள் கணிப்பு
தங்கம் விலை ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், அது மேலும் விலை உயர்வு அடைந்து சாமானிய மக்களின் எட்டா கணியாக மாறிவிடும் என்ற அச்சம் நிலவியது. இந்த நிலையில் தான் தங்கம் இன்று மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக தங்கம் விலை உலக பொருளாதாரம், உலக நாடுகளுக்கு இடையே நிலவும் சிக்கல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி ஏற்ற, இறக்கத்தை சந்திக்கும். இந்த நிலையில், புவிசார் அரசியல் பதட்டங்கள் தணியும் பட்சத்தில் தங்கத்தின் விலையும் குறையும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.