CIBIL Score: சம்பளம் அதிகரித்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்குமா? உண்மை என்ன?

Income and Credit Score Facts : இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் செலவுகளால், கடன் வாங்குவது பலருக்கு சாதாரணமாகிவிட்டது. இருப்பினும், வங்கிகள் கடன்களை வழங்குவதற்கு சிபில் ஸ்கோரை வைத்து வாடிக்கையாளர்களை மதிப்பிடுகின்றன. அதிக சம்பளம் பெற்றால் சிபில் ஸ்கோரும் அதிகரிக்கும் என பலரும் நினைக்கின்றனர். அதன் உண்மை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

CIBIL Score: சம்பளம் அதிகரித்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்குமா? உண்மை என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

02 Jul 2025 10:43 AM

சமூகத்தில், சம்பள உயர்வு பெரும்பாலும் பொருளாதார முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. நமது செலவு செய்யும் சக்தியை அதிகரிப்பதால், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சம்பள உயர்வு  நமது கிரெடிட் ஸ்கோரை (Credit Score) அதிகரிக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இருப்பினும், இந்த விஷயத்தில் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். கிரெடிட் ஸ்கோர் வருமானத்தை (Income) அடிப்படையாகக் கொண்டது அல்ல, பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதிக வருமானம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாக அதிகரிக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், கிரெடிட் ஸ்கோர் அதிகரிப்பது என்பது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல. உங்கள் கடனை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுகின்றன

சிபில் ஸ்கோரில் சம்பளத்தின் பங்கு என்ன?

சிபில் ஸ்கோர் மாதிரிகளில் வருமானம் நேரடியாக கணக்கில் கொள்ளப்படாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துதல், குறைந்த கடன் பயன்பாடு போன்றவை சிபில் ஸ்கோரை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், சம்பள உயர்வு நிதி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. இது காலப்போக்கில் சிறந்த கடன் அமைப்பை உருவாக்க உதவுகிறது. இந்த சம்பள உயர்வு கடனை விரைவாக திருப்பிச் செலுத்தவும், கடனைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், சரியான நேரத்தில் மாதத்தவனைகளை செலுத்துவதை எளிதாக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் நீண்ட கால கடன் தகுதியை படிப்படியாக மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சம்பள உயர்வு எப்படி உதவுகிறது?

நிலையான வருமானம் உள்ள ஒருவருக்கு சிறந்த கடன் இருக்கலாம். இருப்பினும், அதிக வருமானம் உள்ள ஒருவர் கடனை சரியாக நிர்வகிக்காவிட்டால் குறைந்த கடன் மதிப்பெண்ணைப் பெற வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரம் கடனை சரியாக நிர்வகிக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் மதிப்பெண்களில் 30 முதல் 70 புள்ளிகள் அதிகரிப்பைக் காண்கிறார்கள், குறிப்பாக சம்பள உயர்வுக்குப் பிறகு 6 முதல் 8 மாதங்களுக்குள் என்று அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அதிக வருமானம் கடன் பயன்பாட்டைக் குறைத்து கடன் திருப்பிச் செலுத்துதலை துரிதப்படுத்துகிறது. இது பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற கடன்களுக்கு இடையிலான சமநிலையை மேம்படுத்துகிறது, இதன் மூலம் உங்கள் புரொஃபைல் கடன் பெற தகுதியுள்ளதாக மாற்றுகிறது.

சம்பள உயர்வு என்பது நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பு தான். ஆனால் அது கிரெடிட் ஸ்கோரை நேரடியாக உயர்த்தும் என்று கருதுவது தவறான புரிதல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் வருமானத்தை விட, உங்கள் கடனை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, நீங்கள் கடனை எப்போது எடுத்து, எவ்வாறு திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்பதில்தான் உங்கள் நம்பகத்தன்மையும், நிதி ஒழுங்குமுறையும் பிரதிபலிக்கிறது.