US President Donald Trump: இந்தியாவில் தயாரிப்பதை விரும்பவில்லை.. ஆப்பிள் சிஇஓவிடம் முறையிட்ட டொனால்ட் டிரம்ப்!
Apple CEO Tim Cook: அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்தியா உயர் வரி விதிக்கும் நாடு என்றும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு சலுகை வழங்கியுள்ள நிலையில், இந்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார், மே 15: இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump), ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் (Apple CEO Tim Cook) தெரிவித்த செய்தியானது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் தயாரிக்கபடுவதை நான் விரும்பவில்லை என்றும், இந்திய தனது சொந்த நலன்களை கவனித்து கொள்ளட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு ஜீரோ வரியை வழங்கியுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நேரத்தில் இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
என்ன சொன்னார் டிரம்ப்..? முழு விவரம்
கத்தார் தலைநகர் தோஹாவில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்வின்போது ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கிடம் நடந்த உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிபடுத்தினார். அப்போது பேசிய அவர், “டிம், நீ என் நண்பன் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் மிகவும் நல்லவர். நீங்கள் 500 பில்லியன் டாலர் நிறுவத்தை உருவாக்கியுள்ளீர்கள். இப்போது நீங்கள் இந்தியாவில் உற்பத்தில் செய்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம். ஆனால், உலகிலேயே அதிக வரிகளை விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே, இந்தியாவில் விற்பனை செய்வது என்பது மிகவும் கடினம்.
இந்தியாவுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதில், இந்தியா அமெரிக்கா பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தது. சீனாவில் நீங்கள் ஆப்பிள் தொழிற்சாலைகள் கட்டுவதை நாங்கள் பல ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டோம். இப்போது, நீங்கள் இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவால் தன்னைத்தானே கவனித்துக் கொள்ள முடியும். அதன்படி, நீங்கள் அமெரிக்காவில் ஆலைகளை கட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம்:
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி இருப்பை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற பார்ட்னர்களுடன் சேர்ந்து சில ஜபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அசெம்பிள் செய்கிறது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் அதன் நிறுவப்பட்ட ஆலைகளையே பெரிதும் நம்பியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.