“ஒன்றாக டின்னர் சாப்பிடுங்க” இந்திய பாகிஸ்தானுக்கு அட்வைஸ்.. டிரம்ப் சொன்ன விஷயம்!
Donald Trump On India Pakistan Ceasefire : இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணித்ததே நான் தான் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். ஏற்கனவே, அமெரிக்கா தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டதாக கூறியிருந்தார். மேலும், வர்த்தகம் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கூறி வருகிறார்.

அமெரிக்கா, மே 14 : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் (India Pakistan Ceasefire) தணிந்ததற்கு அமெரிக்கா தான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றராக டின்னர் சாப்பிட வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் அட்வைஸ் கொடுத்துள்ளார். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இந்தியா ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
“போரை நிறுத்தியதே நான் தான்”
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மக்கள் வசதிக்கும் பகுதிகளில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், நடுவானிலையே இந்தியா சுட்டு வீழ்த்தியது. இப்படியே இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. மூன்று நாட்களாக நடந்த போர் பதற்றத்தை தணிக்க, உலக நாடுகள் முன்வந்தன.
குறிப்பாக, அமெரிக்கா இந்த விஷயத்தில் தீவிராக இறங்கியது. இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தலையீட்டு முடித்து வைத்தது. இதன் மூலம் இந்த போரை தனது தலையீட்டால் தான் முடிந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். அதனையே மீண்டும் சொல்லி இருக்கிறார்.
சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்த டிரம்ப், அங்கு இந்தியா பாகிஸ்தான் பிரச்னையை அமெரிக்க தான் தீர்த்து வைத்ததாக கூறியிருக்கிறார். எனது மிகப்பெரிய நம்பிக்கை ஒரு சமாதானத் தூதராக இருப்பதும் ஆகும். எனக்குப் போர் பிடிக்காது. மக்கள் 4-5 ஆண்டுகள் ஆகும் என்று சொன்னார்கள். நாங்கள் அதை மூன்று வாரங்களில் செய்தோம்.
இந்திய பாகிஸ்தானுக்கு அட்வைஸ்
சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் வன்முறையைத் தடுக்க எனது நிர்வாகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர்நிறுத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. நான் வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். ஒரு ஒப்பந்தம் செய்வோம் என்று கூறினேன்.
அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம்.அவர்கள் இருவருக்கும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள், வலுவான தலைவர்கள் உள்ளனர். அது அப்படியே இருக்கும் என நம்புகிறேன். சிறியதாக தொடங்கி நாளுக்கு நாள் பெரிதாகி அந்த மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம்.
அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகள் பதட்டங்களைத் தணிக்க ஒன்றாக இரவு உணவு சாப்பிட வேண்டும்” என்றார். இருநாடுகளும் பதற்றத்தை தணிக்கவில்லை என்றால் வர்த்தகத்தை நிறுத்தவதாக கூறியதாக அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், இதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.