இந்திய பயணிகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு முக்கியமான எச்சரிக்கையை அமெரிக்கா (America) வெளியிட்டுள்ளது. விசா (Visa) விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படும் என்று எச்சரிக்கிறது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் (US Embassy), தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “உங்களுக்கான அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு மேல் அமெரிக்காவில் தங்கினால், நாடுகடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு நிரந்தர பயணத் தடையும் அமலாக்கப்படலாம்” என்று எச்சரிக்கவிடுத்துள்ளது.
அமெரிக்க சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குடியுரிமை தொடர்பான விதிகளை கடுமையாக செயல்படுத்தி வருகிரது. அதே நேரத்தில், United States Citizenship and Immigration Services அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட விசா அல்லது பச்சைக் கார்டு (Green Card) வைத்திருப்பவர்கள், அமெரிக்காவின் சட்டங்களை மீறினால் அவர்களை நாடு கடத்தப்பட முடியும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா வந்து விசா அல்லது கிரீன் கார்டு பெறுவது ஒரு உரிமை அல்ல, அது ஒரு சலுகை. இந்த உரிமையை பெறும் அனைவரும் அமெரிக்காவின் சட்டங்களையும் மதிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வன்முறையை தூண்டும் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் அல்லது தொடர்புடைய கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு அமெரிக்காவில் தங்கும் உரிமை இல்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் என்பிசி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி ஸ்டூடன்ட் அண்ட் எக்ஸ்சேஞ்ச் விசிட்டர் புரோகிராம்( Student and Exchange Visitor Program) மற்றும் அமெரிக்க இமிகிரேஷன் அண்ட் கஸ்டம் என்ஃபோர்ஸ்மென்ட் (U.S. Immigration and Customs Enforcement) ஆகியவை இணைந்து, விசா ரத்து நடவடிக்கைகளை முன்னறிவிப்பு இல்லாமல் உடனடியாக அமல்படுத்தும் வழிமுறைகளை செயல்படுத்த உள்ளன. இதற்கான சட்ட வழிமுறைகள் அல்லது மறு வாய்ப்புகள் அளிக்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர், சிறிய விதி மீறல்களுக்கு மாணவர்கள் அல்லது அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு விளக்கம் அளிக்க அல்லது மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது, அதற்கான அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசா ரத்து காரணங்களில், படிப்பு தொடரத் தவறுவது, வேலை அனுமதியை இழத்தல், சட்ட விதிகளை மீறுதல் போன்றவை அடங்கும்.
இந்தியாவின் அமெரிக்க துாதரகம் வெளியிட்ட அறிவிப்பு
If you remain in the United States beyond your authorized period of stay, you could be deported and could face a permanent ban on traveling to the United States in the future. pic.twitter.com/VQSD8HmOEp
— U.S. Embassy India (@USAndIndia) May 17, 2025
இவை அனைத்தும் டிரம்ப் அரசின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகும். இது சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவதை தடுப்பது மட்டுமல்லாமல், சட்டப்படி உள்ளவர்களது நம்பகத்தன்மை, நடத்தை, மனநிலை ஆகியவற்றையும் மதிப்பீடு செய்யும் கட்டுப்பாடுகளை காட்டுகிறது.
இந்திய பயணிகள் கவனிக்க வேண்டியது
-
விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்தால், நாடுகடத்தும் நடவடிக்கைக்கு உள்ளாகலாம்
-
புதிய முறையில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இல்லாமல் விசா ரத்து செய்யப்படும்
-
சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்கள் வெளியிட்டால்கூட விசா ரத்து செய்யப்படலாம்
-
சுற்றுலா, படிப்பு, வேலை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் முறையாக இருக்க வேண்டும்
-
USCIS விதிகள் மற்றும் அமெரிக்க சட்டங்களை முறையாக பின்பற்றுவது கட்டாயம்
அமெரிக்கா செல்லவோ, அங்கு வசிக்கவோ விரும்பும் அனைவரும், இந்நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.