பாலின ஒடுக்குமுறை.. இரண்டு தாலிபான் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி..
ICC Arrest Warrant Against Taliban Leaders: தாலிபான்கள் பிறப்பித்த ஆணைகளின் மூலம் பெண்களின் கல்வி, தனி உரிமை மற்றும் குடும்ப வாழ்க்கை, சுதந்திரம், வழிபாடு சிந்தனை, மத சுதந்திரங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இரண்டு தாலிபான் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் மற்றும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இரண்டு உயர் மட்ட தாலிபன் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளத. தாலிபான்களின் உச்ச தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகிய இருவர் மீதும் தாலிபானின் பாலின கொள்கையை பின்பற்றாத பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரத்தை அடிப்படை உரிமையை பறிக்க ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் தாலிபான் தலைவர்கள் இந்த கைது வாரண்ட் என்பது ஒரு முட்டாள்தனமான ஒன்று என கூறியுள்ளனர்.
இஸ்லாம் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் கைது வாரண்ட் – தாலிபான் தலைவர்கள்:
இஸ்லாமிய சட்டத்தின் விளக்கத்தை ஒரு குற்றம் என்று குறிப்பிடுவதன் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்லாம் மீது வெறுப்பை காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2025 ஜனவரி மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் ஒருவர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து பாலின அடிப்படையிலான துன்புறுத்தலை மேற்கொண்டதற்கு இருவரும் பொறுப்பு என தெரிவித்திருந்தார்.
2021 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் பொது இடங்களில் முழு உடலையும் மறைக்கும் வகையில் புர்கா அணிந்திருக்க வேண்டும், வெளியே இருக்கக்கூடிய ஆண்களுடன் பேசுவதோ அல்லது பார்க்கவோ அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, பொது இடங்களில் பெண்களின் குரல் ஒலிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அறிக்கை:
The International Criminal Court has issued arrest warrants for senior Taliban leaders on a charge of gender persecution. #Afghanistan
This could provide victims and their families with an essential pathway to justice. pic.twitter.com/oo2y3xuNrV
— Human Rights Watch (@hrw) July 8, 2025
தாலிபான்கள் பிறப்பித்த ஆணைகளின் மூலம் பெண்களின் கல்வி, தனி உரிமை மற்றும் குடும்ப வாழ்க்கை, சுதந்திரம், வழிபாடு சிந்தனை, மத சுதந்திரங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகளை ஆதரிக்கும் மக்களையும் தாலிபானின் பாலின விதிகளுக்கு பொருந்தாத எல்.ஜி.பி.டி.க்யூ நபர்களையும் குறிவைத்து இந்த ஆட்சி நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான ஒடுக்குமுறை மோசமடைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய பின் இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளன