இந்தியா மீதான தாக்குதலுக்கு நடுவே பாகிஸ்தானில் நிலநடுக்கம் – பரபரப்பு தகவல்
Earthquake Strikes Pakistan : பாகிஸ்தானில் இன்று அதிகாலை 01.44 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதிரி புகைப்படம்
பாகிஸ்தான் (Pakistan) ராணுவம் மே 9, 2025 அன்று இரவு இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இதையடுத்து, ஸ்ரீநகர் (Srinagar) முதல் சண்டிகர் வரை 15க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்தடை அமல்படுத்தப்பட்டது. மக்கள் வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த தாக்குதல்களுக்கு எதிராக இந்திய விமானப்படை உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்த எதிர்வினை நடவடிக்கைகளை மேற்கொண்டன. S-400 ட்ரயம்ப், பாரக்-8 MRSAM மற்றும் ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம், பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வெற்றிகரமாக தடுக்கப்பட்டன. ஜம்மு, ஸ்ரீநகர், பாதான்கோட், உதம்பூர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கச்ச் மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் 26 இடங்களை மையமாகக் கொண்டு பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களுக்கு இந்திய விமானப்படை மற்றும் இராணுவம் முற்றுப்பூர்வமாக பதிலடி அளித்து, பல ட்ரோன்களை வெற்றிகரமாக முறியடித்தனர். பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை உறுதி செய்துள்ளது. மேலும், பாரமுல்லா பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதற்கான தகவல்களும் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
An earthquake with a magnitude of 4.0 on the Richter Scale hit Pakistan at 01.44 am (IST) today: National Center for Seismology (NCS) pic.twitter.com/zAuDQQ2WRQ
— ANI (@ANI) May 9, 2025
பாகிஸ்தானில் மே 10, 2025 சனிக்கிழமை அதிகாலை 1.44 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவுள்ள நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எந்தப் பகுதியில் ஏற்பட்டது மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தியாவில் 32 விமான நிலையங்கள் மூடல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமாவதை தொடர்ந்து, வட மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 9 முதல் மே 14 வரை அனைத்து சிவில் விமான சேவைகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட விமான நிலையங்களில் அம்ருத்சர், அம்பாலா, ஜம்மு, ஸ்ரிநகர், லே, பூஜ், பாதிந்தா, ஜோத்பூர், ஜைசல்மீர், சிம்லா, பியூண்டர் உள்ளிட்டவை அடங்கும்.