H1B Visa: அமெரிக்க வாங்க.. ஆனா திரும்பி போங்க.. முடிவை மாற்றிக்கொண்ட டிரம்ப்!
அமெரிக்காவில் போதுமான திறமையானவர்கள் இல்லை என்றும் சில துறைகளில் பணியாற்ற வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதனால், H-1B விசா கொள்கையை டிரம்ப் மீண்டும் திரும்ப பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

டிரம்ப்
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், H-1B விசா கொள்கையை பெரிய மாற்றத்துக்கு உட்படுத்த இருப்பதாக அவரது ஆலோசகரான ஸ்காட் பெஸ்சென்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அமெரிக்காவில் H-1B விசா இனிமேல் தற்காலிகமாக மட்டுமே இருக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. முன்னதாக, அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். மேலும், H-1B விசா தொடர்பாக பல புதிய விதிகளையும் அறிவித்தார். இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நம்பினார். எனினும், தற்போது அந்த முடிவில் இருந்து டிரம்ப் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க : இந்தோனேசியா பள்ளி மசூதியில் குண்டு வெடிப்பு.. 55 மாணவர்கள் காயம்.. அதிர்ச்சி சம்பவம்!
அதிக பலனை பெற்ற இந்தியர்கள்:
H-1B விசா திட்டமானது இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70%க்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. இந்நிலையில், டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள H-1B விசாவுக்கான கட்டண உயர்வு, இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமைந்தது. அதோடு, இந்த அதிகப்படியான கட்டணத்தால் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்ற பல இந்தியர்களின் கனவு கேள்விக்குறியானது.
முடிவை மாற்றிய டிரம்ப்:
இந்நிலையில், H-1B விசா திட்டம் குறித்து தனது முந்தைய நிலைப்பாடுகளில் இருந்து மாறி, அதற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், தனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை, உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : ரஷ்யாவில் காணாமல்போன இந்திய மாணவர்… 19 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு – என்ன நடந்தது?
அதோடு, நீண்டகாலமாக வேலையில்லாத அமெரிக்கர்களை பாதுகாப்பு போன்ற முக்கியமான துறைகளில் விரிவான பயிற்சி இல்லாமல் சிக்கலான பாத்திரங்களில் பணியமர்த்த முடியாது என்றும், அத்தகைய பாத்திரங்களை நிரப்ப அமெரிக்காவிற்கு திறமையான வெளிநாட்டினர் தேவை என்றும் கூறியுள்ளார். குடியேற்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, H-1B விசா திட்டத்தை ட்ரம்பின் நிர்வாகம் விமர்சித்த நிலையில், அவருடைய தற்போதைய கருத்துக்கள் இதில் இருந்து அவர் முடிவை மாற்றி விட்டதாக தெரிகிறது.
அமெரிக்கர்களுக்கு பயிற்சி கொடுங்க:
இதுகுறித்து அமெரிக்காவின் பொருளாதாரத் துறைச் செயலாளரும், டிரம்பின் ஆலோசகருமான ஸ்காட் பெஸ்சென்ட் கூறும்போது, H-1B விசா கொள்கையை பெரிய மாற்றத்துக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, H-1B வீசா இனிமேல் நீண்டகாலமாக வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவில் வேலைக்கு வைத்திருக்க அல்ல; மாறாக குறிப்பிட்ட காலத்திற்கு (3-7ஆண்டுகள்) திறமையான வெளிநாட்டு நிபுணர்களை அமெரிக்கா அழைத்து வந்து, அமெரிக்கர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளளார். இதன் மூலம் அமெரிக்காவில் நீண்டகாலமாக தங்க விரும்புவோருக்கு இது புதிய சவால்களை உருவாக்கும் எனத் தெரிகிறது.