ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை..

Russia Earthquake: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுகத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை..

கோப்பு புகைப்படம்

Updated On: 

30 Jul 2025 08:29 AM

ரஷ்யா நிலநடுக்கம், ஜூலை 30, 2025: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் காரணமாக பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமியை உறுதிசெய்து, அலாஸ்காவின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. மாநிலத்தின் அலூடியன் தீவுகளுக்கு அருகிலுள்ள சமல்கா கணவாய்க்கு சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானிய அரசாங்கம் அவசர சுனாமி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

4 மீட்டர் வரை உயர்ந்த சுனாமி அலைகள்:


ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சர்வதேச அளவில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகவும் மோசமான நிலநடுக்கம் என கருதப்படுகிறது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுமார் நான்கு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் குலுங்கி சேதமடைந்தன. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிய வருகிறது. இந்த நிலை மோசமடையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு!

“இன்றைய நிலநடுக்கம் கடுமையானதாகவும், பல தசாப்த கால நிலநடுக்கங்களில் மிகவும் வலிமையானதாகவும் இருந்தது. இதனால் ஒரு மழலையர் பள்ளியும் சேதமடைந்துள்ளது” என்று கம்சட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் 19.3 கிமீ (12 மைல்) ஆழத்தில் , அவாச்சா விரிகுடாவின் கடற்கரையில் 165,000 மக்கள் வசிக்கும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியின் கிழக்கு-தென்கிழக்கில் 126 கிமீ (80 மைல்) தொலைவில் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கிழக்கு ரஷ்ய ஆளுநர், கடற்கரையில் இருந்து மக்களை வெளியேறுமாறும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் அவசர சேவைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது அங்கு இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஜப்பானை தாக்கிய சினாமி அலை:

ரஷ்யாவின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான், ஹவாய் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பிறப்பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வானிலை நிறுவனம் இந்த சுனாமி கடலோர நகரங்களை தாக்க கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் ஹொக்கைட்டோ தாக்கிய சுனாமி அலை சுமார் 30 சென்டிமீட்டர் வரை உயரத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அலைகள் மேலும் உயரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல் – அதிபர் டிரம்ப்:


அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஹவாயில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைக்கு சுனாமி கண்காணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானும் இதில் அடங்கும் ” என குறிப்பிட்டுள்ளார்