Viral Video : மழையில் ஒழுகும் வகுப்பறை.. குடை பிடித்துக்கொண்டு படிக்கும் மாணவர்கள்!
Students Studies with Umbrella | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி வகுப்பறை ஒன்றில் மாணவர்கள் குடை பிடித்துக்கொண்டு படிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மழையின் காரணமாக மேற்கூரை ஒழுகும் நிலையில், மாணவர்கள் இவ்வாறு படிக்கின்றனர்.

தற்போதைய காலக்கட்டத்தில் கல்வி எவ்வளவு தரம் உயர்ந்துள்ளதோ அதே அளவுக்கு பள்ளிகளும், பள்ளி வகுப்பறைகளும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீடியோ ப்ரொஜெக்டர், செயலிகள் என மிகவும் தொழில்நுட்பம் நிறைந்ததாக வகுப்பறைகள் மாறிவிட்டன. ஆனால் இன்றும் கூட சில பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. அந்த வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மழையின் காரணமாக வகுப்பறை ஒழுகும் நிலையில், மாணவர்கள் குடை பிடித்துக்கொண்டு படிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மழையின் காரணமாக வகுப்பறையில் குடை பிடித்துக்கொண்டு படிக்கும் மாணவர்கள்
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பஞ்சபரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி வகுப்பறையில் ஒன்றில் மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்துக்கொண்டு படிக்கும் வீடியோ வெளியாகி கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட 69 மாணவர்கள் அந்த வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு மழையில் படித்துக்கொண்டு இருக்கின்றனர். 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படும் அந்த பள்ளி, மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த பள்ளியில் உள்ள 4 வகுப்பறைகள் ஏற்கனவே இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை பர்கிந்து விமர்சனம் செய்த பாஜக நிர்வாகி
What a shame!
This is the tragic reality of Mamata Banerjee’s “education model” in West Bengal.In Hooghly district, 68 young students aged 5 to 10 are being forced to sit in classrooms holding umbrellas — because rainwater leaks through the broken roof of their school.
Where… pic.twitter.com/BeyXDKvEqC
— Amit Malviya (@amitmalviya) June 20, 2025
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக நிர்வாகி அமித் மால்வியா, இதுதான் மாம்தா பானர்ஜியின் கல்வி மாடல் என்று விமர்சனம் செய்துள்ளார். ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரை ஒழுகியதால் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட 68 மாணவர்கள் குடை பிடித்துக்கொண்டு அமர வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்படும் அந்த கோடிக்கணக்கிலான பணம் எங்கே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.