Viral Video : மெட்ரோ ரயில் பெண்கள் பெட்டியில் வந்த பாம்பு?.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய பயணிகள்!
Snake in Delhi Metro | டெல்லியில் மெட்ரோ ரயிலின் பெண்கள் பெட்டியில் பாம்பு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாம்பு வந்ததாக கூறப்பட்ட நிலையில், பெண்கள் பெட்டியே பதற்றமாக உள்ள நிலையில், பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
டெல்லியை பொருத்தவரை பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான போக்குவரத்தாக மெட்ரோ ரயில்கள் உள்ளன. இந்த நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் டெல்லி மெட்ரோ ரயிலில், பாம்பு வந்ததாக இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயில்கள் கூட பாதுகாப்பாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன, மெட்ரோ ரயிலில் உண்மையாகவே பாம்பு வந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயில்கள்
பொதுவாக நகரங்களில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதை தேர்வு செய்வர். காரணம் மெட்ரோ ரயில்கள் மூலம் மிக விரைவாக பயணம் செய்ய முடியும். இதன் காரணமாக தினசரி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மெட்ரோ ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிலருக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவம் கிடைத்துள்ளது.
மெட்ரோ பெண்கள் பெட்டிக்குள் வந்த பாம்பு – அலறிய பயணிகள்
டெல்லி மெட்ரோ ரயில் ஒன்றில் பயணிகள் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென பெண்கள் பெட்டியில் பாம்பு வந்துள்ளது. அதனை கண்டு மொத்த பெட்டியுமே அலறியுள்ளது. இது குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பெண்கள் பெட்டியில் பாம்பு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெட்டி முழுவதும் பரபரப்பாக உள்ளது. பாம்புக்கு பயந்து சில பெண்கள் இருக்கைகளின் மீது ஏறி நின்றுக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், அந்த வீடியோவில் பாம்பு இருப்பது போன்ற எந்த வித காட்சியும் பதிவாகவில்லை. பெண்கள் பாம்பு என அலறும் காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து மெட்ரோ நிர்வாகத்திடம் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.