WhatsApp : வாட்ஸ்அப்பில் வரப்போகும் புதியம் அம்சம்.. என்ன தெரியுமா?
WhatsApp's New Mute Call Feature | வாட்ஸ்அப் தனது பயனர்களின் நலனுக்காக அவ்வப்போது பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் கால் வரும்போது எந்த வித இடையூரும் இன்றி பேசும் வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுப்போக்கு இப்படி பல தேவைகளுக்கு ஒரு தேர்வாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதன் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாட்ஸ்அப் செயலியில் ஆடியோ கால், வீடியோ கால், குறுஞ்செய்தி பரிமாற்றம், ஆவணங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.
கோடி கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்
சில செயலிகளில் இதில் ஏதேனும் ஒரு சில அம்சங்கள் மட்டும் தான் இருக்கும். ஆனால், வாட்ஸப்அப் இந்த எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ப்ரொஃபெஷனல் (Professional) மற்றும் பர்சனல் (Personal) ஆகிய இரண்டு தேவைகளுக்காகவும் பயன்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதன் காரணமாகே பலரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்
வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், தங்களது பயனர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்கவும் வாட்ஸ்அப் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பயனர்களுக்கு தேவையான அப்டேட்டுகள், முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அது என்ன அம்சம், அதில் என்ன சிறப்புகள் இடம்பெற உள்ளன, இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் எவ்வாறு சிறப்பாக வாட்ஸ்அப்பை பயனபடுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் புதிய அம்சம்
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதாவது வாட்ஸ்அப்பில் போன் கால்கள் வரும்போது அதனை ஏற்பதற்கும், மறுப்பதற்கும் ஆப்ஷன்கள் உள்ளதை போலவே மியூட்டில் (Mute) போடும் அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது உங்களுக்கு ஒருவர் வாட்ஸ்அப்பில் கால் செய்யும்போது அவருடன் பேசாமல் மியூட்டில் வைத்துக்கொண்டு அவர் சொல்வதை மட்டுமே கேட்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில சமயங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் அதிக சத்தம் மிகுந்த பகுதிகளில் இருக்கும்போது உரையாடல் சிக்கலாவதை தவிர்க்க இந்த புதிய அம்சம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் காரணம் வேறு எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் பயனர்கள் அதனை மேற்குறிப்பிட்ட வகையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்த அம்சத்தை வாட்ஸ்அப் குறிப்பிட்ட பயனர்களை வைத்து சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் இந்த அம்சம் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.