Cyber Crime: தமிழ்நாட்டை அலறவிடும் 2 சைபர் மோசடிகள்.. மக்களே உஷார்!

Cyber Scams: தமிழ்நாட்டில் பரிவஹன் இ-சலான் மற்றும் சைபர் ஹெல்ப் டெஸ்க் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வாட்ஸ்அப் மூலம் பரவும் போலி இ-சலான் செயலி மூலம் வங்கி விவரங்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சைபர் மோசடி என்ற பெயரில் பாதிக்கப்பட்டோரை குறிவைத்து, பணம் மீட்பு என்ற பெயரில் மீண்டும் மோசடி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyber Crime: தமிழ்நாட்டை அலறவிடும் 2 சைபர் மோசடிகள்.. மக்களே உஷார்!

சைபர் மோசடிகள்

Published: 

06 Sep 2025 07:53 AM

 IST

சென்னை, செப்டம்பர் 6: தமிழ்நாட்டில் இரண்டு விதமான சைபர் மோசடிகள் அதிகளவில் அரங்கேறி வருவதாக சென்னையில் உள்ள சைபர் கிரைம் தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் இத்தகைய குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எப்படி ஒரு பாசிட்டிவான விஷயமாக இருக்கிறதோ, அதேபோல் நெகட்டிவான விஷயமாகவும் மாறுகிறது. இதன் மூலம் பண மோசடி தொடங்கி பல்வேறு விதமான குற்ற சம்பவங்களும் நிகழ்கிறது. இதனால் தொழில்நுட்பத்தை நம்பலாமா, வேண்டாமா என தெரியாமல் மக்கள் குழம்பி தவிக்கின்றனர். இப்படியான நிலையில் சென்னை சைபர் கிரைம் தலைமை அலுவலகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிகளவில் நடக்கும் இரண்டு மோசடிகள்

அதன்படி இந்த இரண்டு மோசடிகள் பரிவஹான் இ-சலான்  மற்றும் சைபர் ஹெல்ப் டெஸ்க்  ஆகியவற்றுடன் தொடர்புடையவை என கூறப்பட்டுள்ளது. இரண்டு மோசடிகளும் அதிக அளவிலான ஏமாற்றுதலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், டிஜிட்டல் தகவல்தொடர்புகளைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: அதிகரிக்கும் சைபர் கிரைம்.. ஜூலையில் மட்டும் ரூ. 1.65 கோடி மீட்பு – சென்னை காவல் துறை தகவல்..

பரிவஹான் இ-சலான் மோசடி

இதில் பரிவஹான் இ-சலான் மோசடி வாட்ஸ்அப் வழியாகவே அதிகமாக பகிரப்படுகிறது. அதாவது வாகன ஓட்டிகளான நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், உடனடியாக அபராதம் செலுத்த வேண்டும் என கூறியும் ஒரு தகவல் வருகிறது. அந்தச் செய்தியில் அதிகாரப்பூர்வ எம்பரிவஹான் (Mparivahan) செயலி போல இருக்கும் APK ஃபைல் ஒன்று பதிவிறக்கம் செய்ய காட்டப்படுகிறது.

அதனை நீங்கள் கிளிக் செய்தால் போதும். உடனடியாக உங்கள் போனில் உள்ள எஸ்.எம்.எஸ்., தொலைபேசி எண்கள், வங்கி விவரங்கள் என அனைத்து முக்கியமான தரவுகளும் மோசடி நபர்களுக்கு பகிரப்படுகிறது.  மொபைல் போன் ஹேக் செய்யப்படுவதால் உங்கள் அனுமதியின்றி அவர்களால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள வரும் ஓடிபிக்களை எளிதாக பெற முடியும். இதனால் உங்கள் வங்கி பணம் முழுவதுமாக திருடப்பட வாய்ப்புள்ளது.

Also Read: சைபர் கிரைம் எச்சரிக்கை: பிரபலங்களை முன்னிறுத்தி உருவாகும் போலி முதலீடு விளம்பரம்

சைபர் ஹெல்ப் டெஸ்க் மோசடி

இரண்டாவது மோசடியான சைபர் ஹெல்ப் டெஸ்க் மோசடி இது மிகவும் தந்திரமாக கையாளப்படுகிறது. அதாவது ஏற்கனவே சைபர் மோசடிக்கு பாதிக்கப்பட்ட நபர்களை குறிவைத்து இது நடக்கிறது. அவர்கள் தங்களுக்கு உதவி தேட ஆன்லைனில் வழிகளை காண முற்படும்போது, ​​சைபர் கிரைம் ஹெல்ப்லைன் முகவர்கள் அல்லது சட்ட நிபுணர்கள் என்று காட்டிக் கொண்டும் சிலர் இந்த மோசடியை அரங்கேற்றுகிறார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவரின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வாட்ஸ்அப், தொலைபேசி அழைப்புகள், டெலிகிராம் அல்லது போலி மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் இழந்த பணத்தை மீட்டெடுக்க வழிகள் என்ற பெயரில் முன்கூட்டியே பணம் கோருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இரண்டாவது முறையாக நிதி இழப்பு ஏற்படுகிறது.

ஒருவேளை நீங்கள் சைபர் மோசடிக்கு குறி வைக்கப்பட்டதாக உணர்ந்தாலோ அல்லது ஏதேனும் சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக சைபர் குற்ற கட்டணமில்லா உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in மூலம் புகாரளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.