SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் – அதில் என்ன ஸ்பெஷல்?
New Rail App Update : இந்திய ரயில்வே புதிய ஸூப்பர் ஆப்பான 'ஸ்வா ரெயில்'வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போதைய IRCTC ரெயில் கனெக்ட் ஆப்பை விட பல மடங்கு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர், அன்ரிசர்வ் டிக்கெட், ரயில்வே தகவல்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.

இந்தியா (India) போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் ரயில் போக்குவரத்து மக்களின் பயணங்களை எளிதாக்குகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா முழுவதும் ரயிலில் பயணிக்கும் வகையில் அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே தற்போது மக்கள் அனைத்து விதமான சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் புதிய ஸ்மார்ட் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஸ்வா ரெயில் (SwaRail)’ எனும் இந்த புதிய சூப்பர் ஆப், தற்போது உள்ள IRCTC ரெயில் கனெக்ட் பயன்பாட்டை முற்றிலும் மாற்றப்போகிறது. புதிய அம்சங்கள் நிறைந்த இந்த இந்த ஆப் குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
பழைய IRCTC ரெயில் கனெக்ட் ஆப்
நாடு முழுவதும் உள்ள பயணிகள் பரவலாக பயன்படுத்தும் ஆப். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய, பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் செக் செய்ய, பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுக்க, நமது கம்பார்ட்மென்ட்டை கண்டுபிடிக்க என பல சேவைகளுக்கு இந்த ISRCTC ஆப் மக்களுக்கு உபயோகமாக இருந்தது. இதன் மூலம் சுலபமாக பல சேவைகளை பெற முடியும். இது இந்திய ரயில்வேயின் ஆப் என்பதால் மக்கள் இதனை பாதுகாப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது மற்ற அனைத்து சேவைகளுக்கும் பயன்படாது. முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை பெறுவது போன்ற மற்ற அனைத்து சேவைகளையும் ஆஃப் லைன் மூலமாகவே பெற முடியும். குறிப்பாக உணவு ஆர்டர் செய்வது, பயண விவரங்களை தெரிந்துகொள்வது போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆப்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
புதிய ஸ்வா ரெயில் (SwaRail) ஆப்
மத்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தால் (Centre for Railway Information Systems) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த புதிய சூப்பர் ஆப் தற்போது பீட்டா பயன்முறையில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்களோடு வெளியான v127 பதிப்பு, தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது. இந்த ஆப் மூலம் கிடைக்கும் சேவைகள் குறித்து பார்க்கலாம்.
-
முழுமையான ரயில்வே குறித்த தகவல்களுடன் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம்.
-
ஆன்லைன் டிக்கெட் பதிவு மட்டுமின்றி அன்ரிசர்வ் டிக்கெட் மற்றும் பிளாட்ஃபாரம் டிக்கெட்டுகளும் பதிவு செய்யலாம்.
-
உணவு ஆர்டர் செய்வது முதல், பார்சல் சேவைகள் வரை அனைத்தும் ஒரே ஆப்பில் கிடைக்கும்.
-
மேலும் ரியல்டைம் ரெயில் ஸ்டேட்டஸ், PNR தகவல், பயண உதவி உள்ளிட்ட வசதிகள்.
-
புதிய ஏஐ வசதிகள் மூலம் பயனர் அனுபவம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
-
பயனர்கள் தங்களது IRCTC அல்லது UTS ஆப்பின் லாகின் விவரங்களை பயன்படுத்தி இந்த ஆப்பில் இணையலாம்.
IRCTC ரெயில் கனெக்ட் பயன்பாடு விரைவில் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், பயனர்கள் ஸ்வா ரெயில் பயன்பாட்டிற்கு மாறுவது கட்டாயம். மேலும் அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வசதியை வழங்கும் இந்த புதிய ஆப், ரயில்வே பயணிகளுக்கான நவீன தீர்வாக அமைகிறது.