உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் செயலிகள் பாதுகாப்பானவையா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?
Mobile Apps Safety | தற்போது ஸ்மார்ட்போனில் அனைத்து தேவைகளுக்கும் தனித்தனி செயலிகள் உள்ளன. இந்த நிலையில், மொபைல் போனில் இருக்கும் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பானவையா, அவை உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனவா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. ஸ்மார்ட்போன்கள் அன்றாட வேலைகளை எளிதாக்கி தருவதன் காரணமாக பலருக்கும் அது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலி என பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை எல்லாம் தற்போது சில நிமிடங்களில் முடித்துவிட முடிகிறது. என்னதான் செயலிகள் இத்தகை சிறப்பு சேவைகளை வழங்கினாலும், அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது நாம் பயன்படுத்தும் செயலிகள் மூலம் நமது தரவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்கள் போனில் இருக்கும் செயலி பாதுகாப்பானவையா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பாதுகாப்பற்ற செயலிகளை வழங்கும் ஸ்டோர்கள்
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவை ஒரு செயலியை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக அதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா, பாதுகாப்பானவையா என்பதை சோதனை செய்கின்றன. ஆனால், சில மூன்றாம் தரப்பு ஸ்டோர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதில்லை. அவை ஆபத்தான செயலிகளை கூட அறிமுகம் செய்கின்றன. அத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பயனர்கள் மால்வேர், ஸ்பைவேர் மற்றும் மோசடிகளுக்கு ஆளாகின்றனர்.
இதையும் படிங்க : குற்றவாளி முகம் தெரிந்தாலே அலெர்ட்.. குடியரசு தின பாதுகாப்பில் களமிறங்கும் AI கண்ணாடி!
செயலிகள் பாதுகாப்பனவையா – கண்டுபிடிப்பது எப்படி?
- நீங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் லாக் இன் செய்வதற்கு முன்பு அது கேட்கும் அனுமதிகளை கவனமாக படியுங்கள்.
- நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலிக்கும், அது அனுமதி கேட்கும் அம்சத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
- அவ்வாறு தேவையற்ற அனுமதிகளை கோறும் செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.
எப்போதும் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் போன்ற நம்பகத்தன்மை உடைய ஸ்டோர்களில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள். மற்ற மூன்றாம் தரப்பு ஸ்டோர்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே பாதுகாப்பு குறைந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதற்கு அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் மொபைல் போனில் செட்டிங்க்ஸ் (Settings)-க்குள் சென்று கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.