வெளிநாட்டில் ஓனர்.. பில்டிங்கை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர்!
Chennai Crime News: சௌதியில் வசிக்கும் சாரா வஹாப் என்பவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது கட்டிடத்தை அசோக் என்பவர் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, தனக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இளைஞர் கைது
சென்னை, ஆகஸ்ட் 23: சென்னையில் உரிமையாளருக்கே தெரியாமல் கட்டடத்தை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்து சம்பாதித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நம் ஊரில் சிலர் வீடு, நிலம் போன்ற சொத்து விஷயங்களை வாங்கி அதனை வேறொருவரை பராமரிக்க விட்டு விட்டு வெளிநாட்டில் வசிப்பது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை வருகை தந்து அதனை பார்வையிட்டு செல்வதும் இருந்து வருகிறது. அப்படியாக திருவான்மியூர் அடுத்துள்ள பெருங்குடியைச் சேர்ந்த சாரா வஹாப் என்பவர் தற்போது ஐக்கிய அரபு அமீரக நாடான சௌதியில் வசித்து வருகிறது. இவருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கௌடியா மட சாலையில் உள்ள கட்டிடம் ஒன்று சொந்தமாக உள்ளது. சாரா தனது பெற்றோருடன் சௌதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு வரை அந்தக் கட்டிடத்தில் வசித்து வந்தார்.
அந்த கட்டிடமானது தரைத்தளத்தில் 3 கடைகளும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் தலா 2 வீடுகள் என 4 வீடுகளும் கொண்டதாக அமைந்திருக்கிறது. 2018ல் அந்த நேரத்தில் தரைத்தளத்தில் ஒரு புகைப்பட ஸ்டுடியோ மட்டுமே செயல்பட்டு வந்தது. மீதமுள்ள கடைகள் காலியாக இருந்தது. இந்த ஸ்டூடியோவை புல்லாராவ் என்ற நபர் நடத்தி வந்தார்.
Also Read: Krishnagiri: ஆதாரில் மோசடி.. இறந்த கருவுடன் வாழும் 16 வயது சிறுமி – நடந்தது என்ன?
இதற்கிடையில் 2019ம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கட்டுப்பாடுகள் இருந்ததால், சாரா வஹாப்பால் 2022ம் ஆண்டு வரை இந்தியா திரும்ப முடியவில்லை. அதேசமயம் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வந்த புல்லாராவ் காலமானதால் அவரது மகன் அசோக் தற்போது அதனை நடத்தி வருவதாக அறிந்துக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் அசோக் தான் தான் அந்த முழு கட்டிடத்திற்கும் உரிமையாளர் என்பதை காட்டிக் கொள்ளும் வண்ணம் போலி சொத்து ஆவணங்களை உருவாக்கி, குத்தகைதாரர்களிடமிருந்து கணிசமான முன்பணத்தை வசூலித்ததாகவும் சாராவுக்கு தகவல் கிடைத்தது. அதில் சுமார் ரூ.27 லட்சம் வரை சம்பாதித்தாகவும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அசோக்கை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
Also Read: பொறி உருண்டை கொடுத்து 8 சவரன் திருட்டு.. ஓடும் பஸ்ஸில் துணிகரம்!
ஆனால் தான் சிக்கிக் கொண்டதை அறிந்த அசோக் சாராவுக்கு கொலை மிரட்டல் விடுத்தான். இதனால் பயந்து போன சாரா ராயப்பேட்டை செல்லாமல் தனது பாதுகாப்புக்கு பயந்து, தற்காலிகமாக பெருங்குடியில் தங்கியிருந்தார். பின்னர் முறைப்படி அசோக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.ராயப்பேட்டை போலீசார் இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் உறுதி என்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து 2025, ஆகஸ்ட் 20ம் தேதி அசோக் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.