மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரித்து ஏன்?.. காரணத்தை விளக்கிய மத்திய அரசு..
Metro rail projects rejection: மதுரை, கோவை ஆகிய இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளதை காரணம் காட்டி மத்திய அரசு இத்திட்டத்தை நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பாக திமுக எம்.பி. கதிர் ஆனந்த் நேற்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

மெட்ரோ ரயில்கள்
மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பது குறித்து மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. இது தொடர்பான முன்மொழிவுகள் தமிழக அரசால் மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், பல்வேறு காரணங்களைக் கூறி, மத்திய அரசு மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தது. குறிப்பாக மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே 31.93 கி.மீ தூரத்திற்கும், கோவையில் அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை, உக்கடத்தில் இருந்த சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை 39 கி.மீ தூரத்திற்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளதை காரணம் காட்டி மத்திய அரசு இத்திட்டத்தை நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பாக திமுக எம்.பி. கதிர் ஆனந்த் நேற்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க : எட்டாக்கனியாய் மாறிய தங்கம்.. ஒரே நாளில் ரூ. 9,000 உயர்வு.. 17,000 ரூபாயை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்..
கோவையில் பயண தூரம் குறைவு:
இதற்குப் பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் தோகன் சாஹு கூறியதாவது, தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலித்து, தனது கருத்துக்களை மாநில அரசுக்குத் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூரில் சராசரி பயணத் தூரம் குறைவாக இருப்பதாலும், சாலைகளில் தற்போதைய சராசரி வேகம் காரணமாகவும், பயண நேரத்தில் ஏற்படும் சேமிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், மக்கள் மெட்ரோ ரயில் பயணத்திற்கு மாறுவார்களா என்பது நிச்சயமற்றதாக உள்ளது.
சென்னை மெட்ரோ பயன்பாடே குறைவு:
54.10 கி.மீ நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில், தினமும் சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே பயணிக்கின்றனர். ஆனால், முன்மொழியப்பட்ட 34 கி.மீ நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் தினமும் 5.9 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று தமிழக அரசு கணித்துள்ளது. இந்த எண்ணிக்கை சென்னையுடன் ஒப்பிடும்போது யதார்த்தத்திற்குப் புறம்பாக மிக அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கை நம்பகத்தன்மை அற்றது. மேலும், பல இடங்களில் போதுமான நிலம் இல்லாததால், ரயில் நிலையங்களைக் கட்டுவது சாத்தியமற்றதாக உள்ளது.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
மதுரையிலும் சாத்தியமில்லை:
மதுரையைப் பொறுத்தவரை, தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான போக்குவரத்துத் திட்டத்தில், தற்போதைய பயணிகளின் எண்ணிக்கை ஒரு விரைவுப் பேருந்து போக்குவரத்து அமைப்புக்கு போதுமானதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமற்றது என்ற நிலை உள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.