சென்னையில் உட்பட வட தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. இடி, மின்னலுடன் மழைக்கும் வாய்ப்பு.. வானிலை அப்டேட்!!
Weather Update: இன்று (ஏப்ரல் 4) முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

கோப்புப் புகைப்படம்
Tamilnadu Weather Today: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மரத்வாடா முதல் தென் தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவானது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்றைய தினம் வழக்கம் போல வறண்ட வானிலையே நிலவியது.
இதையும் படிக்க: வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்..
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஏப்ரல் 4) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
வரும் நாட்களில் வானிலை நிலவரம்:
தொடர்ந்து, ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 7 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை மழை தொடரும்.
வெப்பநிலை மாற்ற விவரம்:
இன்று (ஏப்ரல் 4) முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயம், வெப்பநிலை வேறுபாடானது, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். தென் தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக் கூடும்.
இதையும் படிக்க: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன்.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்..
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (ஏப்ரல் 4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.