வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!
சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலைகளில் வெள்ள நீர்
சென்னை, டிசம்பர் 03: சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதனிடையே, கடந்த 3 நாட்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காற்றழுத்த பகுதியாக வலுகுறைந்தாலும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளதாகவும், இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.
இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
6 இடங்களில் மிக கனமழை பதிவு:
அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை எண்ணூர், செங்கல்பட்டில் 15 செ.மீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. திருவண்ணாமலை சேத்துப்பட்டு 13 செ.மீ, திருமயம், சென்னை விம்கோ நகர், தாமரைப்பாக்கத்தில் 12 செ.மீ மழையும், மணலி புதுநகர், திருக்கழுக்குன்றம், மேடவாக்கம், திருவாரூர், குடுமியான்மலை, இலுப்பூரில் தலா 11 செ.மீ மழையும், சென்னை பள்ளிக்கரணை, மாமல்லபுரம், வடக்குத்து, கேளம்பாக்கம், செங்குன்றம், உளுந்தூர்பேட்டையில் 10 செ.மீ மழையும், தொண்டி, ஒக்கியம் துரைப்பாக்கம், பொன்னேரி, திருவாரூர், கத்திவாக்கம், அம்பத்தூர், பொள்ளாச்சியில் தலா 9 செ.மீ மழையும் பெய்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்பு:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை:
சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் – செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. கொளத்துார், பெரம்பூர் பகுதிகளில் மோட்டார் வாயிலாக கால்வாயிலும், பள்ளமான சாலையில் இருந்து மேடான பகுதிக்கும் வெள்ளநீர் திருப்பி விடப்பட்டது.
இதையும் படிக்க: வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!
கொளத்துார் ஜி.கே.எம்., காலனி, கதிர்வேடு, ரெட்டேரி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதிகளிலும், சாலை முழுதும் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதியில் மழைநீர் தேக்கமடைந்துள்ளது. எனினும், அவற்றை அகற்ற மாநகராட்சி சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.