இன்று தவெக செயல்வீரர்கள் கூட்டம்.. முக்கிய முடிவெடுக்கும் விஜய்?
TVK party workers meet at mamallapuram: இன்றைய தவெக செயல்வீரர்கள் விஜய் தலைமையில் நடப்பதால், அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை குறித்து வாய்திறக்காத விஜய், இன்றைய கூட்டத்தில் நிர்வாகிகளுடன் வெளிப்படையாக பேசுவாரா? என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தவெக செயல் வீரர்கள் கூட்டம்
சென்னை, ஜனவரி 25: தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கழக செயலர்கள் கூட்டம் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் தேர்தல் பிரச்சாரக் குழுவின் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: 170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..
ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல், சிபிஐ விசாரணை:
இதனிடையே, கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, விஜய் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அதோடு, அடுத்த பொதுக்கூட்டம் குறித்தும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தவெக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒருபுறம், விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் சர்ச்சை நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வரும் 27ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. அதேசமயம், கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமெடுத்துள்ளது.
விசில் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்:
இதையொட்டி, இரண்டு முறை விஜய் டெல்லியில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். அவரது பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி, தன்னைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்னைகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு, இவ்வளவு அழுத்தத்திலும் விஜய் இதுவரை எந்தவிவாகரம் குறித்தும் பேசவில்லை. இந்த சூழ்நிலையில், தவெகவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது. இதனால், தாங்கள் கேட்ட சின்னம் கிடைத்துவிட்டதாக அக்கட்சியினர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெருக்கடிகள் குறித்து விஜய் வாய் திறப்பாரா?
இந்த பரபரப்பாக சூழ்நிலையில், இன்றைய தவெக செயல்வீரர்கள் விஜய் தலைமையில் நடப்பதால், அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை குறித்து வாய்திறக்காத விஜய், இன்றைய கூட்டத்தில் நிர்வாகிகளுடன் வெளிப்படையாக பேசுவாரா? என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?
கியூஆர் கோடு கட்டாயம்:
இந்த கூட்டத்தில் கியூஆர் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அனுமதிச்சீட்டுகளை முன்னதாகவே, அக்கட்சியின் பொதுச்செயாலளர் ஆனந்த், நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் விஜய், இன்றைய கூட்டத்தில் என்ன கூற உள்ளார் என்பது அக்கட்சியனரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.