டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்..? வெளியான அறிவிப்பு

TNPSC Group 4 Exam 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 13,89,738 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். முடிவுகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனவும், 10,000 பேர் அரசுப் பணியில் சேர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் TNPSC தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்..? வெளியான அறிவிப்பு

TNPSC குரூப் 4 தேர்வு

Published: 

12 Jul 2025 14:00 PM

சென்னை ஜூலை 12: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission-TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர் (Prabakar) தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி (Presidency Girls’ Higher Secondary School) தேர்வு மையத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.

10,000 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட திட்டம்

இந்த வருட குரூப் 4 தேர்வில் 13,89,738 பேர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கும். தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு முழுவதும் 10,000 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்

இதுவரை ஏற்கனவே ஐந்து தேர்வுகள் நடைபெற்றுள்ளன என்றும், குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். குரூப் 4 தேர்வு முழுமையாக ஓஎம்ஆர் முறையில் நடைபெறுவதால், விடைத்தாள்கள் கணினி மூலம் திருத்தப்பட்டு முடிவுகள் விரைவாக தயாரிக்கப்படலாம் எனவும் விளக்கினார். மதிப்பெண்கள் தொடர்பாக தேர்வாளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் புகாரளிக்கலாம் என்றும், ஏபிசிடி கவுண்ட் முறையில் மதிப்பீடு செய்யப்படுவது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டது எனவும் கூறினார்.

Also Read: 3,935 காலி பணியிடங்களுக்காக இன்று நடக்கும் குரூப் 4 தேர்வு

வினாத்தாள் வெளியானது என்பது தவறான தகவல்

மதுரை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியானது என்பது தவறான தகவல் என்று அவர் உறுதிப்படுத்தினார். வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் அனைத்தும் காவல் பாதுகாப்புடன், சீல் வைக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. தேர்வு வினாக்களில் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெறக் கூடாது என வினாத்தாள் தயாரிப்புப் பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு முன்னமே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு, TNPSC தலைவர் பிரபாகர் IAS தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், குரூப் 4 தேர்வுக்கான செயல்முறைகள் திட்டமிட்டவாறு நடைபெறுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC) என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு சுயாதீன அமைப்பாகும். இது மாநில அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தும் முக்கியமான அமைப்பாக செயல்படுகிறது.