டோல்கேட்டில் கட்ட பணம் இல்லை.. அரசு பேருந்தை சிறைபிடித்த ஊழியர்கள்.. பணம் கட்டி விடுவித்த பயணி!
Tiruvannamalai Bus Impounded: திருவண்ணாமலை அருகே செங்கம் சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஒரு மணி நேரம் சிறைப்பிடிக்கப்பட்டது. பேருந்தின் பாஸ்டேக்கில் போதிய பணமின்மை காரணமாக சுங்க கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஒரு பயணி தனது சொந்த பணத்தை செலுத்தி பேருந்தை விடுவித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பயணிகள் அரசு போக்குவரத்து கழகம் உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணம் கட்டி மீட்ட பயணி
திருவண்ணாமலை, மே 27: திருவண்ணாமலை (Tiruvannamalai) அடுத்த செங்கம் அருகே சுங்கசாவடிக்கு பணம் செலுத்தாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் அரசுப்பேருந்து சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சொந்த பணத்தை கட்டு பயணி ஒருவர் அந்த பேருந்தை மீட்டு பயணத்தை தொடர உதவினார். இதற்கிடையில், சுங்கச்சவாடி (Tollgate) ஊழியர்கள் மற்றும் பயணிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றும், அரசு போக்குவரத்துக்கழகம் உரிய பயணத்தை செலுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
என்ன நடந்தது..?
திருவண்ணாமலையில் இருந்து செங்கம் சுங்கசாவடி வழியாக சென்னை அரசுப்பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. கடந்த 2 நாட்களுக்கு மேலாக இந்த அரசுப்பேருந்தானது தனது பாஸ்டேக்கில் போதிய பணமின்றி திருவண்ணாமலை மற்றும் சென்னை இடையே இயங்கி வந்துள்ளது. இந்தநிலையில், இன்றும் அதாவது 2025 மே 27ம் தேதி அரசுப்பேருந்தானது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் சுங்கசாவடி வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென செங்கம் சுங்கசவாடியை சேர்ந்த ஊழியர்கள் சிலர் பேருந்தை டோல்கேட்டை மடக்கி சிறைப்பிடித்தனர். தொடர்ந்து, டிரைவர் மற்றும் நடத்துனர் இறங்கி, சுங்கசாவடி ஊழியர்களிடம் பேருந்து கழகம் பணம் இன்னும் செலுத்தவில்லை என்றும், அடுத்த முறை வரும்போது முழுமையான தொகையை கட்டி விடுவோம் என்று வலியுறுத்தியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத சுங்கசாவடி ஊழியர்கள் பேருந்தை விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், பேருந்துக்குள் காத்திருந்த பயணிகள் சிலர் இறங்கி சுங்கசாவடி ஊழியர்களிடம் தங்களுக்கு அவசரம் என்றும் பேருந்தை விடுமாறு கேட்டுக்கொண்டனர்.
அப்போது, சுங்கசாவடி ஊழியர்கள் பேருந்தை விட மறுத்ததால், பயணிகளும், பேருந்து மற்றும் நடத்துனரிடம் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால், இங்கு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக பேருந்து அங்கையே இருந்தது. தொடர்ந்து சுங்கசாவடி ஊழியர்கள் பயணிகளிடம் உங்களுக்கு அவசரம் என்றால் நீங்கள் பணத்தை கட்டி எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, பயணி ஒருவர் தாமாக முன்வந்து 400 ரூபாயை கட்டி பேருந்து செல்ல உதவி செய்தார்.