Digital Arrest : வாட்ஸ்அப் அழைப்பு மூலம் ரூ.13 லட்சம் மோசடி.. திருவாரூர் முதியவருக்கு ஷாக் கொடுத்த டிஜிட்டல் அரெஸ்ட்!
Old Man Lost 13 Lakh in Scam | திருவாரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் நிலைய மாஸ்டர் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி ரூ.13 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர், ஆகஸ்ட் 29 : திருவாரூரில் (Thiruvarur) டிஜிட்டல் கைது மோசடியில் (Digital Arrest Scam) சிக்கிய நபர் ஒருவர் சுமார் ரூ.13 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீப காலமாகவே இந்த டிஜிட்டல் கைது மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற தபால் நிலைய மாஸ்டர் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், டிஜிட்டல் கைது மோசடியில் அவர் பணத்தை இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் கைது மோசடி – ரூ.13 லட்சம் பணத்தை இழந்த நபர்
திருவாரூரை சேர்ந்தவர் குஞ்சிதபாதம். 80 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற தபால் நிலைய மாஸ்டர் ஆவார். இந்த நிலையில், இவருக்கு இரண்டு வாட்ஸ்அப் எண்களில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள், உங்கள் முகவரிக்கு சட்ட விரோதமான முறையில் கடத்தல் பொருட்கள் பார்சல் வந்துள்ளது. அதன் காரணமாக உங்களை டிஜிட்டல் கைதில் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : யாருப்பா நீ? பாம்பு பிடிக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. இந்த தவறை பண்ணாதீங்க!
பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாறிவிடும் என மிரட்டல்
இது தொடர்பாக பேசிய அவர்கள், பண கொடுக்கவில்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்படும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளனர். அவர்கள் கூறுவதை கேட்ட அந்த முதியவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவர் மர்ம நபர்கள் கூறியபடியே மூன்று வங்கி கணக்குகளுக்கு சுமார் ரூ.13 லட்சத்தில் 50 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்த பணத்தை அவர் மொத்தம் மூன்று தவணைகளாக மோசடிக்காரர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : சத்தீஸ்கரில் கடும் வெள்ளம்.. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. சொந்த ஊருக்கு சென்றபோது சோகம்!
பணத்தை முடக்கி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
அவர் மோசடிக்காரர்களுக்கு பணம் அனுப்பி முடித்த நிலையில் தான் அவருக்கு தான் டிஜிட்டல் மோசடியில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், குஞ்சிதபாதம் பணம் அனுப்பி வங்கி கணக்குகளில் இருந்து ரூ.6,205 முடக்கி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் இத்தகைய டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை குறித்து பாதுகாப்பாக இருக்க காவல்துறை எச்சரித்துள்ளது.