ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை.. காவலரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. திடுக் சம்பவம்..
அவர் தூக்கத்தில் சாய்வதுபோல் மாணவி மீது சரிந்து விழுந்துள்ளார். ஆரம்பத்தில் அது தற்செயலான நிகழ்வாக இருக்கலாம் என்று எண்ணி அமைதியாக இருந்த மாணவி, பின்னர் அவர் வேண்டுமென்றே பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார் என்பதை உணர்ந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் மிரண்டு போயுள்ளார்.

கோப்புப் புகைப்படம்
நீலகிரி, மார்ச் 14: நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். செமஸ்டர் தேர்வுகள் நெருங்கியிருந்த நிலையில், தேர்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று காலை (மார்ச் 13) கூடலூரிலிருந்து கோவைக்குச் செல்லும் அரசு பாலக்காடு பேருந்தில் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது மூன்று இடங்கள் கொண்ட ஒரு இருக்கையில் அமர்ந்து தேர்வுக்குத் தேவையான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தார். அந்நேரத்தில் கோவை காவல் துறையில் பணியாற்றும் ஒரு காவலர் அதே பேருந்தில் ஏறி அம்மாணவி அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் வந்து அமர்ந்தார்.
மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை: தமிழகத்தில் திருமணங்கள் பாதிக்குமா? – வெளியான தகவல்
தூங்குவது போல் நடித்து தொல்லை:
சிறிது நேரத்தில் மற்றொருவரும் அதே இருக்கையில் வந்து அமர்ந்ததால், இடம் குறுகியதை சாக்காக வைத்து அந்த காவலர் மாணவியை நெருக்கியபடி ஒட்டி அமர்ந்துள்ளார். தொடர்ந்து, கூடலூரில் இருந்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, அவர் தூக்கத்தில் சாய்வதுபோல் மாணவி மீது சரிந்து விழுந்துள்ளார். ஆரம்பத்தில் அது தற்செயலான நிகழ்வாக இருக்கலாம் என்று எண்ணி அமைதியாக இருந்த மாணவி, பின்னர் அவர் வேண்டுமென்றே பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார் என்பதை உணர்ந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் மிரண்டு போயுள்ளார்.
துணிச்சலாக செருப்பால் அடித்த மாணவி:
எனினும் அந்த காவலரின் தொல்லை மேலும் தொடர்ந்து அதிகரித்தவுடன், பேருந்து ஊட்டி பேருந்து நிலையத்தை வந்தடைந்தபோது ஆவேசமடைந்த மாணவி, துணிச்சலுடன் தனது செருப்பை கழற்றி அந்த காவலரை கடுமையாக தாக்கி வெளுத்து வாங்கியுள்ளார். இச்சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் கூடியது. இதனிடையே, செய்தியறிந்த ஊட்டி மேற்கு போலீசார், உடனே நிலைய வளாகத்துக்கு வந்து அந்த காவலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் படிக்க: மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை… டிஐஜி சரவணன் அதிரடி உத்தரவு!
புகார் கொடுக்க அஞ்சிய பெற்றோர்:
இதற்கிடையே மாணவியின் பெற்றோர், வழக்குப் பதிவு செய்தால் தங்கள் மகளின் கல்வி, வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்றும், சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அஞ்சி, போலீசாரிடம் புகார் எதுவும் வேண்டாம் என்று கோரிக்கை வைத்து விலகிக் கொண்டனர். இதன் விளைவாக தற்போது வழக்குப் பதியப்படாமல் விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. பேருந்தில் காவலர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் அப்பகுதியினரிடையே, அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.