சேலத்தில் தவெக பொதுக்கூட்டம்? 5 இடங்கள் தேர்வு…அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு!
TVK Public Meeting In Salem: சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதி கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .
2026 சட்டமன்ற் தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் பொதுக் கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு வயது குழந்தை உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பொதுக் கூட்டம் ஆகியவற்றை மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் டிச.30-இல் பொதுக்கூட்டம்
இதே போல, ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 30- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த 4- ஆம் தேதி ( வியாழக்கிழமை ) பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!




பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
ஆனால், டிசம்பர் 3- ஆம் தேதி ( புதன்கிழமை ) கார்த்திகை தீபத் திருநாள், டிசம்பர் 6- ஆம் தேதி ( சனிக்கிழமை ) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் காவல்துறை மூலம் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
மற்றொரு கொங்கு மண்டலத்தில் தவெக கூட்டம்
இந்த நிலையில், ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இந்த மாத இறுதியில், அதாவது டிசம்பர் 30- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தக் கட்சியினர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.
பொதுக்கூட்டத்துக்கு 5 இடங்கள் தேர்வு
இதற்காக ஓமலூர், சேலம் சீலநாயக்கன்பட்டி பிரதான சாலை, இரும்பாலை சாலை, நேதாஜி மைதானம், கோட்டை மைதானம் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வெளியானது விரைவு வாக்காளர் பட்டியல்…. மாவட்ட வாரியான லிஸ்ட் இதோ – நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?